

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்புக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இருதரப்பும் சமரசமானது.
ஆனாலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டுமென சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்காததால் பழனிசாமி மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் எதிலும் இவர்கள் பங்கேற்பதில்லை. சட்டப்பேரவை கூட்டத்துக்கும் தனி அணியாக வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்தவுடன் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய 3 பேரும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை, தலைமைச் செயலகத்தில் அவரது அறைக்கு சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. அதற்கு முன்பாக அவர்கள் அமைச்சர் செங்கோட்டையனையும் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எஸ்.பி.வேலுமணி கூறும்போது, “பட்ஜெட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம், மடிக்கணினி போன்ற திட்டங்களை தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது.
இது முதல் பட்ஜெட் என்பதால், வரும்காலங்களில் தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டம்-2 நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
அதிமுகவில் இருந்து விலகுவதாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதிமுக எங்களின் கட்சி” என்றார் சி.வி.சண்முகம் கூறும்போது, “மானியக் கோரிக்கையில் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை அமைச்சர் ஆனந்திடம் வழங்கினோம்.
தமிழகத்துக்கு அவர் அமைச்சர் என்பதால் நேரில் பார்த்தோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்திப்பதில்லையே என்று கேட்கிறீர்கள். அவருக்கும் எங்களுக்கும் என்ன இருக்கிறது? நான் ஏன் பழனிசாமியை சந்திக்க வேண்டும்” என்றார்.
எம்எல்ஏக்கள் சந்திப்பு
அதேபோல், சட்டப்பேரவையில் முன்வரிசையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை, எம்எல்ஏக்கள் மு.தமிமுன் அன்சாரி (மஜக), ஜவாஹிருல்லா (மமக), நித்தியானந்தன் (கொமதேக) ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது கூட்டணி கட்சியின் சின்னங்களில் போட்டியிடுவது அந்த நேர அரசியல் நடவடிக்கையாகும். நாங்கள் மூவரும் தனிக்கட்சி நடத்தி வருவதால் தங்களுக்கு முன்வரிசை வாய்ப்புகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
முந்தைய திமுக, அதிமுக ஆட்சியிலும் இந்த மரபுகள் பின்பற்றப்பட்டதாக பேரவைத் தலைவரிடம் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விவகாரத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக பேரவைத் தலைவர் பிரபாகர் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.