காலாவதியான அனைத்து சுங்கச் சாவடிகளையும் உடனடியாக மூட வேல்முருகன் வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப்படம்

பிரதிநிதித்துவப்படம்

Updated on: 
1 min read

சென்னை: ‘காலாவதியான அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக மூட வேண்டும். மக்கள் மீது திணிக்கப்படும் கட்டணக் கொள்ளையை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் பகல்கொள்ளை நடப்பதை எதிர்த்து நாங்கள் பல ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும், சட்டப்பேரவையிலும் சமரசமின்றிப் போர்க்குரல் எழுப்பி வருகிறோம்.

சட்டப்பேரவையில் விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளின் அத்துமீறல்களைப் புட்டுப்புட்டு வைத்து, "காலாவதியான சுங்கச்சாவடிகளை இழுத்து மூடு" என்று நாம் முழங்கியபோது செவிசாய்க்காத மத்திய பாஜக அரசுக்கு, இப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சம்மட்டி அடி கொடுத்துக் கேள்வி எழுப்பியுள்ளது.

சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. பாலங்கள் பாழடைந்து கிடக்கின்றன. ஆனால் கட்டண வசூல் மட்டும் தங்குதடையின்றி நடப்பது ஏன்? உங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்ற கொழுப்பிலா இப்படிச் செயல்படுகிறீர்கள்? என்று நீதிமன்றம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மத்திய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறது. நீதிமன்றம் கன்னத்தில் அறைந்தாற்போல் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகளைத்தான், நாங்கள் பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.

போட்ட முதலை வட்டியும் முதலுமாகப் பல மடங்கு எடுத்து ஏப்பம் விட்ட பிறகும், சுங்கச்சாவடி என்ற பெயரில் இன்னும் எதற்காக மக்கள் பாக்கெட்டில் கையை விடுகிறீர்கள்? இது வழிப்பறி கொள்ளை இல்லையா? 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதியை உங்கள் சொந்தக் காலடியிலேயே போட்டு மிதித்துவிட்டு, ஊருக்கு ஊர் சுங்கச்சாவடி வைத்து மக்களிடம் ரத்தம் உறிஞ்சுவது எந்த வகையில் நியாயம்?

மத்திய அரசும் தமிழக அரசும் பூச்சாண்டி காட்டி ஒருவரையொருவர் கைகாட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழகத்தில் இயங்கும் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அராஜக வசூல் தொடரும் என்பதை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.

காலாவதியான அத்தனை சுங்கச்சாவடிகளையும் உடனடியாக மூட வேண்டும். மக்கள் மீது திணிக்கப்படும் கட்டணக் கொள்ளையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல், நீதிமன்றக் கண்டனத்தோடு மக்கள் மன்றத்தின் கடுமையான போராட்டங்களையும் மத்திய அரசு சந்திக்க நேரிடும்’ என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப்படம்</p></div>
கனடா எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in