சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டிட்வா புயல் காரணமாக, தொடர்ச்சியாகப் பொழியும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம், தமிழகம் முழுவதும் பேரழிவை உருவாக்கியுள்ளது.
நெற்பயிர்கள், கரும்பு, வாழை உள்ளிட்ட முக்கியமான பயிர்கள், லட்சக்கணக்கான ஏக்கர்கள் அளவில் முற்றிலும் அழிந்து கிடக்கின்றன. தேனி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் தரையில் விழுந்து கிடக்கின்றன.
விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் முழுவதும் கரும்புத் தோட்டங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
எனவே, இப்பேரழிவை, மாநில பேரிடர் என்று அறிவித்து, தமிழகத்துக்கு ரூ.2ஆயிரம் கோடியை அவசர நிதியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.