ஆதிதிராவிடர் நல விடுதி நிதி முறைகேடு: தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

 வேல்முருகன் |கோப்புப் படம்

வேல்முருகன் |கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: “ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இவ்விவகாரம் தொடர்பாக 8 வட்டாட்சியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கை குறித்துச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

மாணவர்களின் கல்வி, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டிய நிர்வாக அமைப்புகளின் செயல்பாடே தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

குறிப்பாக, குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சில அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றதாகவும், சிலர் பணி ஓய்வு பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரியது.

மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கத் தாமதமானது ஏன்? இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமின்றி, முறைகேட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அல்லது நிர்வாகப் பின்னணியைப் பாராமல் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி, கல்வி பயிலும் மாணவர்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதே ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.

எனவே, இவ்விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்து, நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய விளக்கம் அளிப்பதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றிச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> வேல்முருகன் |கோப்புப் படம்</p></div>
“திமுகவின் வலிமையை உணர்த்தியது மதுராந்தகம்” - பரந்தாமன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in