

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட சிவானந்தா சாலையில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (ஏஐஒய்எஃப்) மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் (ஏஐஎஸ்எஃப்) நேற்று ஊர்வலமாக புறப்பட்டனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் க.பாரதி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் மறுத்ததால் போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக கைது செய்து அங்கிருந்து அகற்றி, திருவல்லிக்கேணி சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்துச்சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் க.பாரதி கூறுகையில், “மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து திட்டமிட்டு எதிர்க்கட்சிகளின் வாக்காளர்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் அரசியலமைப்பு சட்டத்தின் எவ்வித விதிமுறையையும் பின்பற்றாமல் இந்த நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா முழுவதும் 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மற்ற 2 தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பை மீறி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துள்ளார். எனவே, இதற்கு அவர் முழு பொறுப்பேற்று உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வாக்காளர்கள் நீக்கத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.