

கும்பகோணம்: “அமைச்சர் ஷாஜகான், எம்எல்ஏ ஜவாஹிருல்லா இருவரும் தேசத்துக்கு எதிரான பிரிவினைவாத கருத்துகளை பேசக்கூடியவர்கள்” என பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலுார் சையது இப்ராஹிம், கச்சேரி சாலையில் மரக்கன்றுகளை நட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியது: “முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜகான், மனித நேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா இருவரும் தேசத்துக்கு எதிரான பிரிவினைவாத கருத்துகளை பேசக்கூடியவர்கள். ஆனால், முதல்வர் விஜய் தனது ஆட்சியை பாதுகாப்பதற்காக, நமது நாட்டில் பிரிவினைக்கு வித்திட்ட முஸ்லிம் லீக்கை உள்ளே வைத்து, அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்.
முதல்வர் விஜய் ஒரு தவறான முன்னுதாரணத்தை தமிழக மண்ணில் ஏற்படுத்தி இருக்கிறார். திமுக, அதிமுக இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது என்று சுயகட்சி தொடங்கினார். ஆனால், ஜவாஹிருல்லா உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, தனது சொந்த கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்து, முகவரியற்ற ஒரு நிலையில் இருக்கிறார்.
அதேபோல, முஸ்லிம் லீக் கட்சியும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம் என கூறி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். எனவே, இவர்கள் முஸ்லிம் நலனுக்காக இல்லை. தங்களின் சுயலாபத்துக்காக நிற்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற அவப்பெயரை சுமந்து கொண்டிருக்கிறோம். அந்த அவப்பெயரில் இருந்து நாம் மீள முடியும்.
போதைப்பொருள் கடத்தல், தங்கம் கடத்தல் என 50 சதவீதத்துக்கும் மேல் இஸ்லாமியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். குறுக்கு வழியில் சிலர் சம்பாதிப்பதால், படித்த இஸ்லாமிய இளைஞர்கள் பாதிப்படைகிறார்கள். இதையல்லாம் தடுக்க வேண்டும். சிறுபான்மை சமூகம் எப்போதுமே அச்சுறுத்தலாகவே இருக்கிறது என்ற ஒரு பிம்பத்தை அமைப்பது, சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவாது.
இஸ்லாமியர்கள் சுதந்திரத்தோடு பயணிக்க, இந்த பாரத மண்ணை தவிர உலகில் வேறு எங்கும் வாய்ப்பு இல்லை. பிரதமர் மோடியின் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு உறுதியாக இருந்து பயணித்தால், மிகச் சிறந்த வெற்றியை இந்த சமூகம் பெறும்.
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், தவெக கூறுவதில் நியாயம் இருக்கிறதா என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன். மூன்று தேர்தல் ஆணையர்களும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர் என்கிற விஷயத்தை புரியாத முட்டாள்கள்தான் இதை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
தேச நலன், தேசப் பற்றை யாரெல்லாம் முன் நிறுத்தி வருகிறார்ளோ, அவர்களை அவமரியாதை செய்யும் விதமாக ராகுல் காந்தி, ஆம் ஆத்மி உள்ளிட்ட சிலரும், தமிழகத்தில் உள்ள எடுபிடிகளும் அந்த வேலைகளை செய்கிறார்கள்.
கரப்பான் பூச்சிகள் என்றைக்குமே வீட்டுக்கும், நாட்டுக்கும் ஆபத்து. அதை மருந்து அடித்து கொன்றால் தான் நல்லா இருக்கும். தமிழக மக்கள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.