

புதுச்சேரி: “மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அரசியல் அறத்துடன் பணிபுரிகிறோம். தவெக, திமுக, அதிமுகவினர் ஏராளமானோர் தமிழகத்தில் இருந்து வந்து வீடு வீடாகப் பதுங்கிவிட்டனர். பணம் கொடுக்கத் தயாராகின்றனர். இது அறநெறியற்ற அரசியல். இது ஜனநாயகப் படுகொலை.” என்று இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் வீரபாண்டியன் புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீமை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், “இடதுசாரிகள் இணைந்து தேர்தல் பணியாற்றுவது தொடரும். அதை துவக்கியுள்ளோம். இடது கருத்துகளை விரும்பும் சிந்தனையாளர்களையும் இணைத்துக் கொள்வோம். பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். தமிழகம், புதுச்சேரி சார்பில் இரு கேள்விகள் வைக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேஸ் பிரதமர் நெதன்யாகு உரையாற்றியபோது உலகமே வெளியேறிய போது ஐனநாயக இந்தியா ஆதரவு தெரிவித்தது ஏன் என்பதற்கு பதில் தர வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பேர் நீக்கியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இவர் பிரதமருக்கு தெரியாமல் செயல் புரிந்திருக்க முடியாது. இதற்கு பொறுப்பு ஏற்கிறாரா என்பதையும் பிரதமர் தெரிவிக்க வேண்டும். இந்த கேள்விகளுக்கும் பிரதமர் தமிழகம் வருகையில் பதில் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் தீர்ப்புக்கு எதிராக ஆளுநர் பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது என்பதால் ஆதரவு வெளியில் இருந்து தருகிறோம். தவெக அரசு தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தாவிட்டால் போராடுகிறோம். தவெக அரசு ஆதரவு தொடர்கிறது. நாங்கள் எப்போதும் மக்களின் பக்கம்தான்.
கரூர் சம்பவத்துக்கு நீதி வழங்கப்படவேண்டும். சுதந்திர விசாரணையை முதல்வர் விஜய் தொடங்கலாம். குற்றவாளிகள் முன்பு சட்டத்தின் முன்பு நிறுத்தலாம். சிறுமிகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளான வீரமணி வழக்கு சரியான பாதையில் செல்லப்படவேண்டும். நீதிமன்றம்தான் இதை கையில் எடுத்தது. சட்டம் மட்டுமல்ல சமூகமும் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு தரவேண்டும். இதை அரசியல்படுத்தக்கூடாது - அதே நேரத்தில் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்” என்றார்.
தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அரசியல் அறத்துடன் பணிபுரிகிறோம். தவெக, திமுக, அதிமுக கட்சியினர் ஏராளமானோர் தமிழகத்தில் இருந்து வந்து வீடு வீடாக பதுங்கிவிட்டனர். பணம் கொடுக்க தயாராகின்றனர். இது அறநெறியற்ற அரசியல். இது ஜனநாயக படுகொலை. இவர்களை அறநெறியுடன் வெல்வோம்” என்றார்.