கூட்டணிக் கட்சிகளை உங்கள் சின்னத்தில் போட்டியிடக் கோருவது ஏற்புடையது அல்ல: ஸ்டாலினுக்கு திருமா தோழமை சுட்டல்

விசிக தலைவர் திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன்

Updated on
1 min read

“தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமைக் கட்சிகளை அவற்றின் விருப்பத்துக்கு மாறாக, தலைமைக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடக் கோருவது ஏற்புடையது அல்ல” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலினை வலியுறுத்தி அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். இந்த சூழலில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல், கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை.

கூட்டணித் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டியது கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்குமான பொறுப்பு ஆகும். கொள்கைப் பகையை வீழ்த்துவதும், கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வதும் ஒவ்வொரு கட்சியின் கடமை. ஆனால், அந்த கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு, வெற்றிக்கான உத்திகளை வகுக்க வேண்டியது தலைமைக்குரிய பொறுப்பு ஆகும். தோழமைக் கட்சிகள் தாமே விரும்பி கூட்டணித் தலைமை கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால், அதை ஏற்றுக் கொள்வது அக்கட்சிக்கு செய்யும் பேருதவி ஆகும்.

அதேசமயம், தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமைக் கட்சிகளை அவற்றின் விருப்பத்துக்கு மாறாக, தலைமைக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடக் கோருவது ஏற்புடையது அல்ல. அது அவர்களது சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். தோழமைக் கட்சிகளின் அந்த சுதந்திரத்தில் கூட்டணித் தலைமை தலையிடாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு செலுத்தும் பெருமதிப்பாகும்.

மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவர்களது பெருந்தன்மையாக இருக்கட்டும். ஆனால், அண்ணன் கமல்ஹாசனை, ‘அவ்வாறு விட்டு விட மாட்டோம்’ என அரவணைத்துக் கொள்ள வேண்டியது தங்களது உயரிய மாண்பாக அமையட்டும்.

தொகுதிகள் எண்ணிக்கை எதுவானாலும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ‘டார்ச்’ சின்னத்தில் போட்டியிட அனுமதித்து, கூட்டணி மீதான நன்மதிப்பையும், தங்கள் மீதான பெருமதிப்பையும் மேன்மேலும் உயர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் ‘வெல்வோம் ஒன்றாக’ என்கிற தங்களது முழக்கம் முழுமையடையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>விசிக தலைவர் திருமாவளவன்</p></div>
திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள்: மயிலாப்பூர் பிரச்சாரத்தில் பழனிசாமி ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in