

திருமாவளவனை மதிக்கவில்லை என்று கூறி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அவர் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா, நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி, நகர், இலங்கியனூர், வலசை, பிஞ்சனூர் மற்றும் சேப்பாக்கம், ஐவது குடி உள்ளிட்டக் கிராமங்களில் பிரேமலதா பிரச்சார வேனில் பயணித்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது, எப்போதும் குரலை உயர்த்திப் பேசும் பிரேமலதா, வழக்கத்துக்கு மாறாக சோர்வுடன் காணப்பட்டார்.
மிகுவும் சுருக்கமாக பேசி வாக்கு சேகரிப்பதை காணமுடிந்தது. “அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்” என்று அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, அங்கு சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பிரேமலதா.
அப்போது விசிக-வைச் சேர்ந்த சிலர், ‘திருமாவளவன் கடலூரில் பேசும்போது மேடையில் இருந்த பிரேமலதா அவரை மதிக்கவில்லை, எழுந்து நிற்கவில்லை’ என்று தெரிவிக்க, அங்கிருந்த விசிக மண்டல செயலாளர் திராவிட மணி, அவர்களை சமாதானம் செய்தார். உடனே முன்னாள் மாவட்ட செயலாளரான நீதிவள்ளல் உள்ளிட்டோர் திராவிட மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த போலீஸார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
கடந்த வாரம், கடலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேடையில் இருந்தார். திருமாவளவன் மேடையில் அவரது பெயரை கூறி அறிமுகம் செய்தபோது பிரேமலதா விஜயகாந்த் எழுந்து நிற்கவில்லை. இதுகுறித்து சர்ச்சை எழுந்தது. அதற்கு பிரேமலதா பின்னர் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.