

சென்னை: 2026-ம் ஆண்டுக்கான விசிக விருதுகள் பெறுவோர் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
2022-ம் ஆண்டுமுதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வருகிறோம். அந்த வரிசையில் 2026-ம் ஆண்டுக்கான விசிக விருதுகள் பெறுவோர் பட்டியலை தற்போது வெளியிடப்படுகிறது.
விருதுகள் விவரம்
இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர் விருது’ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கே.சொக்கலிங்கத்துக்கும், ‘பெரியார் ஒளி விருது’ மனித உரிமைப் போராளி ஹென்றி டிபேனுக்கும், ‘மார்க்ஸ் மாமணி விருது’ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், ‘காமராசர் கதிர் விருது’ பால.பிரஜாபதி அடிகளார், ‘அயோத்திதாசர் ஆதவன் விருது’ சமூக செயற்பாட்டாளர் ரூத்மனோரமா, ‘காயிதேமில்லத் பிறை விருது’ ஐஎன்டிஜே மாநில துணைத் தலைவர் முகமது முனீர், ‘செம்மொழி ஞாயிறு விருது’ தமிழறிஞர் வேல்சாமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் ஜூலை 5-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.