

சென்னை: முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தலைமைச் செயலகத்துக்கு வெளியே சிறப்பு மனுப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப் பிரிவில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர்.
தவெக ஆட்சிக்கு வந்தபின் மனு அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குடிநீர், வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இதனால், தலைமைச் செயலகத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மனுக்களை எளிதாகப் பெறவும், தலைமைச் செயலகத்துக்கு வெளியே முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு மனுப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தலைமைச் செயலகத்துக்கு வரும் பொதுமக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தப் பெட்டியில் நேரடியாக செலுத்தலாம். அந்த மனுக்கள் உரிய பதிவுகளுடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைக்காக பரிசீலிக்கப்படும்.
அதே சமயம், அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு தர விரும்புபவர்கள் வழக்கம்போல் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் வந்து மனுக்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.