

தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவனம் சார்பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்படதொடக்க விழா சென்னை விஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு நினைவு பரிசை புலம்பெயர் தமிழர் நிறுவன தலைவர் கலைமதி, துணைத் தலைவர் பாலா கண்ணன் வழங்கினர். உடன் பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தின் தலைவர் முத்துஜோதி, புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன துணை தலைவர் ரேவதி சுயம்புலிங்கம், தயாரிப்பாளர் மாலா மணியன். படம்:எம்.முத்துகணேஷ்
மேலக்கோட்டையூர்: தமிழ், புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவனம் சார்பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்பட விழா நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவனம் சார்பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப் பட தொடக்க விழா நேற்று வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள சென்னை விஐடி வளாகத்தில் நடைபெற்றது. நிறுவன தலைவர் க.கலைமதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், தயாரிப்பாளர் மாலா மணியன், பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தின் தலைவர் மு.முத்துஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவனம் சார்பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்பட விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்களை ஒன்று சேர்ப்பதை தலையாயக் கடமையாக செய்து வரும் இந்த அமைப்பை பாராட்டுகிறேன்.
உலகமெங்கும் தமிழ் பரந்து கிடக்கிறது. சுமார் 160 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் 100 நாடுகளில் அவர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். தமிழர்களை ஒருங்கிணைத்து திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
பல நாடுகளில் தமிழர்கள் இருந்தாலும் பலருக்கு தமிழ் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியவில்லை. தமிழ் வளர்ச்சிக்காக இந்த அமைப்பு செய்யும் அனைத்து பணிகளுக்கும் விஐடி சார்பில் ஒத்துழைப்பு வழங்கப்படும். உலகில் மூத்த மொழி தமிழ். தமிழ் மொழி வளர்ச்சிக்காக விஐடி என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் விஐடி தமிழ் மன்ற நிர்வாகி சிவக்குமார், கர்னாடக இசைப் பாடகர் சிக்கில் குருசரண், தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவன துணைத் தலைவர்கள் மருத்துவர் ரேவதி சுயம்புலிங்கம், பாலா கண்ணன், நாகலிங்கம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ் மற்றும் புலம் பெயர் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் அடையாளமான இலச்சினை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக புலம் பெயர் தமிழர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
திரைப்பட விழா குறித்து அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழ் மொழி, வரலாறு, கலை, பண்பாடு மற்றும் மரபுகளின் வளமையை வருங்கால சந்ததியினருக்காக பேணிக் காக்கும் முதன்மையான தமிழ் ஆய்வு நிறுவனமாக விளங்குவதே எங்கள் நோக்கம் ஆகும். அறிவியல் ரீதியிலான ஆய்வுகளை உருவாக்கி தொழில் நுட்பம் வழிநடத்தும் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகள் மூலம் வரும் தலைமுறையினரை கல்வியில் உயர்த்த வேண்டும். உலகம் முழுதும் உள்ள தமிழர்களை இணைக்கும் தன்னிறைவான ஓர் ஆய்வு நிறுவனத்தை நிறுவுவதே எங்கள் நோக்கம்.
உலகளாவிய தமிழர்களை மையமாகக் கொண்டு செம்மொழி மரபிலிருந்து இன்றைய தற்கால சிந்தனை வரை -தமிழர் பண்பாட்டின் பன்முக பரிமாணங்களை ஆய்ந்து போற்றும் சிறப்பு மையமாக இந்த நிறுவனம் விளங்கும். ஆண்டுதோறும் தமிழ் மரபுக் கதைகளைக் கொண்டு தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திரைப்படங்கள் தயாரிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.