

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி கடந்த 6 மாதங்களாக அத்தொகுதியில், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்தச் சூழலில், காங்கிரஸ் அவருக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கவில்லை.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு 'சீட்' அளிக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த வைத்திலிங்கம், “திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போதே, ‘நாராயணசாமிக்கு 'சீட்' இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வருக்கு 'சீட்' தரக்கூடாது’ என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. நான் இப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறேன்.
நான் வெற்றி பெற்றால், மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகும். அந்த இடத்தில் நாராயணசாமியை பயன்படுத்துவோம். நன்கு பேசக்கூடிய ஒருவர், நாடாளுமன்றத்துக்கு வேண்டும் என்று தலைமை நினைக்கிறது. அப்படி நினைப்பது தவறா?” என்றார். அப்போது நாராயணசாமியும் உடனிருந்தார்.