

திருச்சி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.2) தொடங்கிவைக்கிறார்.
தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உரிமைகளை மீட்கவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ “சமத்துவ நடைபயணம்” என்கிற பெயரில் தனது 11-வது நடைபயணத்தை திருச்சியில் இன்று (ஜன.2) தொடங்கி, மதுரையில் வரும் 12-ம் தேதி நிறைவு செய்கிறார்.
இந்த நடைபயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கிவைத்துப் பேசுகிறார். நிகழ்ச்சிக்கு, அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகிக்கிறார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகிக்கிறார். மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ வரவேற்றுப் பேசுகிறார்.
விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். நடைபயணத்தில் மதிமுக இளைஞரணி, தொண்டரணி, மாணவரணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொள்கின்றனர்.
தென்னூரில் இன்று காலை தொடங்கும் நடைபயணம் மத்தியப் பேருந்து நிலையம், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் சென்றடைகிறது. பஞ்சப்பூரில் இரவு தங்கி ஓய்வெடுத்துவிட்டு, நாளை (ஜன.3) காலை திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக விராலிமலை நோக்கி செல்கிறது.
நடைபயணம் மேற்கொள்ளும் வைகோ மற்றும் மதிமுகவினருக்கு வழிநெடுகிலும் மதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கட்சியினர் தெரிவித்தனர்.