பொங்கலுக்கு பின் கூட்டணி நிலை குறித்து உறுதியான தகவல் வெளியாகும்: நயினார் நாகேந்திரன்

Nayiar Nagendran on Poll Alliance
நயினார் நாகேந்திரன்
Updated on
2 min read

திருநெல்வேலி: தமிழகத்தில் பொங்கலுக்கு பின் கூட்டணியின் நிலை குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியில் பேச்சி ஓடையின் குறுக்கே நபார்டு நிதி உதவியுடன் ரூ.6 கோடியில் அமையவுள்ள பாலத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகரித்துவிட்டது. கையில் புத்தகம் ஏந்தி கல்வி நிலையங்களுக்கு செல்லும் வயதில் அரிவாள் தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து கொள்ளும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் கடிதம் எழுதினேன்.

இதன் மூலம் சட்டப்பிரிவு 356- ஐ பயன்படுத்த போவதில்லை . மாறாக தமிழக மக்களே சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த தயார் நிலையில் உள்ளனர். அதாவது மக்கள் மனதில்ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான எண்ணத்தை திமுக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி விட்டனர். நிச்சயமாக வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்படும். தேர்தலுக்கு இன்னும் 90 நாட்களுக்கும் அதிகமாக உள்ளன. பொங்கலுக்குப் பிறகு கூட்டணியின் நிலை குறித்து உறுதியான தகவல்கள் அறிவிக்கப்படும்.

வரும் 4-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும் ‘தமிழகம் தலைநிமிர தமிழன்’ பயணத்தில் பங்கேற்க இருக்கிறார். மறுநாள் 5-ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அன்றே டெல்லி திரும்புகிறார்.

தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு பிரதமர் வருகை இல்லை. பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைய வேண்டும். இணைவார்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது அதிமுக விவகாரம். ஆனால் இருவரும் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு தமிழக அரசு பணம் எதுவும் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தனியாரிடம் கடன் வாங்கியாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உள்ளனர். தமிழகத்தின் அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு 60 சதவீத நிதியை கொடுக்கிறது. மீதி உள்ள 40 சதவீதம் மட்டுமே மாநில அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நிதி நிர்வாகமும் சரியில்லை நீதி நிர்வாகமும் சரியில்லை

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத சிலர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். அவர்கள் தமிழர் திருநாள் என கூறி தப்பித்துக் கொள்வார்கள். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் மட்டும் தெரிவிக்கும் அவர்கள் போலி மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கின்றனர்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தீபாவளி கொண்டாட வேண்டாம் என தனது கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்களால் அவரும் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in