

சென்னை: கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை, ஏப்-6ம் தேதி முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியதாக பிரதமர் மோடி சமூக ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டார்.
மத்திய அணுசக்தித் துறை, கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையை 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டத் தொடங்கியது. 2004-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, இத்திட்டம் 2010-ம் ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.
ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதை கைவிட்டன.
இவ்வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அவ்வுலை மூடப்பட்டது.
பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர் பீனிக் ஈனுலையும் அதிக பொருளாதாராச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.
இவ்வுலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகத்தையும், பல அணுசக்தித் துறை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே, கூடங்குளத்தில் 6 அணுவுலைகளும், அணுக்கழிவு மையங்களும் மத்திய அரசு அமைத்திருக்கிறது. இப்போது, ஆபத்துமிக்க ஈனுலைகளைச் செயல்படுத்தி தமிழக மக்களை கதிரியக்க ஆபாயத்தில் தள்ளுகிறது மோடி அரசு.
தமிழக மக்களை சோதனை எலிகளாக்கி ஈனுலையை செயல்படுத்த முயலும் பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.