

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என முதல்வரை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் எந்த பகுதியிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தாமிர ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தினார்.
முதல்வரை சந்தித்த பின் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நானும், பல விவசாயிகள் மற்றும் மீனவ சங்கங்களும் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி ஆலையை மூட வைத்தோம். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் அதற்கு தடை பெற்றது.
மேலும் பல வழக்குகளை ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தினேன். இந்த அனைத்து தகவல்களையும் முதல்வரிடம் விரிவாக கூறினேன், அனைத்தையும் பொறுமையாக கேட்டறிந்தார். மேலும் பல வகைகளில், வேறு பெயர்களில் இந்த நச்சு ஆலையை கொண்டு வர உங்களிடம் வருவார்கள், எந்த வகையிலும் இந்த நச்சு தாமிர தொழிற்சாலைக்கு முதல்வர் அனுமதி வழங்கக்கூடாது என அவரிடம் வலியுறுத்தினேன். முதல்வர் அனைத்தையும் கூர்ந்து கவனித்தார். நிச்சயம் அனுமதி தரமாட்டார் என எனக்கு நம்பிக்கை உள்ளது.
மேலும் நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை தொகுத்து ஆக.4-ம் தேதி வெளியிட உள்ளேன். அதை துணை குடியரசு தலைவர் வெளியிட தமிழக முதல்வர் பெற்றுக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டுள்ளேன். அதற்கான அழைப்பையும் விடுத்தேன். தூத்துக்குடியில் ஜூலை 2-ம் தேதி நச்சு ஆலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம். அதில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் பங்கேற்க உள்ளன.
அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. நான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்க உள்ளதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டு சாதுர்யமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மூடினார்.
முதல்வர் விஜய் எளிமையாக, இயல்பாக, வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறார். இந்த அரசு அமைந்தத்தில் இருந்து கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமில்லாமல், மக்களின் மனதை குளிர்விக்கும், ஆரோக்கியமான நிர்வாகத்தை முதல்வர் விஜய் நடத்தி வருகிறார். மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா என்பது யூகமான செய்தி. யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு குறித்து பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நல்லது நடந்தால் ஆதரிப்பேன், அல்லது நடந்தால் எதிர்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.