

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கு விளைவித்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மதிமுகவும், வணிகர் சங்கங்களும், தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினர்.
அன்றைய தமிழக அரசு, போராட்டக்காரர்களை நசுக்கும் நோக்கத்தில் 13 பேரை சுட்டுக்கொன்றது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஆண்டு கணக்கில் நடத்தப்பட்டு, இறுதியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் கொண்ட அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியது.
இந்தியாவில் தாமிரம் கிடைப்பது இல்லை என்று அண்மையில் தெரிவித்த பிரதமர் மோடி, அப்படி தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டுமானால் அவரது குஜராத் மாநிலத்திலேயே அமைக்கலாமே? தமிழக மக்கள் நலனை காக்க வேதாந்தா குழுமம் தமிழகத்தில் மீண்டும் ஆலை அமைக்க எவ்விதத்திலும் முதல்வர் அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.