

மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் சிலை முன் அவரது பாடல்களைப் பாடி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாக்கு சேகரித்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழைய திரைப்படப் பாடல்கள் குறிப்பாக டி.எம்.செளந்தரராஜன் பாடல்களுக்கு தீவிர ரசிகர். சமீபத்தில் சென்னை வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபியை சந்தித்துப் பேசிய பின் வைகோ அளித்த பேட்டியில், ‘இருவரும் பழைய திரைப்படப் பாடல்களுக்கு ரசிகர்கள். பாவமன்னிப்பு, பாலும் பழமும் பாடல்களைக் கேட்டோம்’ என்று கூறினார்.
இந்நிலையில், ‘மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதன் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வைகோ முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், அப்பகுதியில் உள்ள திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் சிலை முன் அவரது பாடல்களை பாடி வைகோ வாக்கு சேகரித்தார். ‘உள்ளம் உருகுதய்யா..’, ‘கற்பனை என்றாலும்...’ ஆகிய பாடல்களை பாடினார். கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் உறுதியாக வெற்றி பெறும். மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். சாதி, மதம், கட்சி எல்லைகளை கடந்து, 5 ஆண்டுகளாக தொகுதி மக்கள், நாடி வந்த அனைவருக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் பணிபுரிந்துள்ளார். டி.எம்.செளந்தரராஜன் சிலை அமைத்தது உட்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிற மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டுக்குள் எத்தனை முறை வந்தாலும், எத்தனை தொகுதிகளில் சுற்றி வந்தாலும் வெற்றிபெற முடியாது. பிரதமர் விமானத்தில் வருகிறார். ரோடு ஷோ செல்கிறார். அப்போது அவர் வாகனத்தை ஏன் சோதனை யிடவில்லை. எல்லோருக்கும் ஒரே அளவுகோல் இருக்க வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர், பிற மத்திய அமைச்சர்களின் வாகனங்களையும் சோதனையிட வேண்டும். அப்படி செய்தால் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுவதாக மக்கள் நம்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.