

சென்னை: ‘வைகோ 83’ என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்றும், சுவரொட்டிகள், பேனர்கள் வைத்து என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்றும் தனது கட்சித் தொண்டர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் 1944-ம் ஆண்டு, செப்டம்பர் 22-ம் தேதி பிறந்தேன். ஆனால், கலிங்கப்பட்டி ஆரம்ப பாடசாலையில் என்னை சேர்க்கும்போது வயது குறைவாக இருக்கிறது என்று கூறி, நான்கு மாதங்கள் முன்னதாக மே 22-இல் நான் பிறந்தேன் என்று பள்ளி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது. எம் இயக்கத்தில் யாரும் எனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தேன். பின்னர் எப்படியோ எனது பிறந்த நாள் செப்டம்பர் 22 என்று அறிந்துகொண்டார்கள். எனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் அந்த நாளைக் கொண்டாடினார்கள்.
அண்ணா பிறந்தநாள் விழாவை மதிமுக தோன்றிய நாள் முதல் மாபெரும் மாநாடுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். இயக்கத்தில் உள்ளவர்கள் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்திவிட்டு, எனக்கு தெரியாமல் பொருட் செலவு செய்து, எனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.
இந்த ஆண்டு ‘வைகோ 83’ என்று இலச்சினை தயாரித்திருக்கிறார்கள். அண்ணா பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை. இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22-ம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த நாளில் யாரும் என்னைச் சந்திக்க முற்பட வேண்டாம். நான் எங்காவது பிறர் அறியாவண்ணம் அமைதியாகக் கழிக்க நினைக்கிறேன். என் புகைப்படம் போட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் வைப்பது போன்ற செயல்களில் கழகத் தோழர்கள் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம்.
‘வைகோ 83’ என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கொள்கிறேன். இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்படுமானால் என் மன அமைதிக்காக, என் எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், நீங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.