மதுரை: திராவிட இயக்கத்தை அழிப்போம் என்பது எவராலும் முடியாது என மதுரையில் நடைபெற்ற சமத்துவ நடைபயண பொதுக்கூட்டத்தில் மதிமுக நிறுவனர் வைகோ ஆவேசமாக பேசினார்.
கடந்த 2-ம் தேதி திருச்சியில் இருந்து சமத்துவ நடைபயணம் தொடங்கிய வைகோ மதுரையில் பயணத்தை நிறைவு செய்தார். இதையொட்டி மதுரை ஓபுளா படித்துறை பகுதியில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி வரவேற்றார்.
இதில் வைகோ பேசியதாவது: இப்பயணத்தை நிறைவு செய்ய முடியுமா. உடல்நலம் ஒத்துழைக்குமா என நினைத்தேன். எதிரிகளுக்கும் ஏளனமாகிவிடுமோ என அஞ்சினேன். அமைதியாக திகழும் தமிழகத்தில் மோதல், கலகம் தடுக்க மக்களிடம் செல்வோம், முழக்கமிடுவோம் என்ற நோக்கில் இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன். மதுரை மாநகரில் 11-வது நடைபயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன். இவ்வியக்கத்திற்கு உற்சாகம் அளிக்க இப்பயணம் உதவும் என கருதுகிறேன்.
அண்ணாவின் தம்பியாகவும் கருணாநிதியாலும் வார்பிக்கப்பட்டவன். ஏற்கெனவே சாதி, மத மோதல் தடுக்க, 19 மாத சிறை வாசத்திற்கு பிறகு தென்னக நதிகளை இணைக்க நெல்லை - சென்னை நடைபயணம் சென்றேன். மது, போதையின் பிடியில் இருந்து தமிழகத்தை காக்கவே இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன்.
பாஜக முன்னாள், இன்னாள் தலைவர்கள் போதைப்பொருள் தடுக்க வலியுறுத்தியதாகவும், இதற்காக வைகோ கூட நடைபயணம் செய்கிறார் என சொல்கின்றனர். நான் அறிவித்த பிறகேதான் போதைப்பொருள் பற்றி அவர்கள் பேசினர். ஆனால், அவர்கள் புதிதாக சொன்னது போன்று கூறுகின்றனர். நான் அறிவித்த பிறகே தான் உங்களுக்கு ஞானம் வந்ததா?
தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கருதியே இப்பயணத்தை மேற்கொண்டேன். நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, கோயில்களிலுள்ள மூலஸ்தான சிலைகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வதை தடுத்தேன். இதன்மூலம் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரியில்லை. இஸ்லாமியர்கள் இந்துக்களை மதிக்கின்றவர்கள்.
இன்றைக்கும் திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் சென்று வழிபாடு நடத்தும் தர்கா உள்ளது. பல ஆண்டாக இதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், நீதிபதி ஒருவர் தர்கா அருகிலுள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என, தீர்பளித்துள்ளார். அவர் எல்லை மீறிவிட்டார். அவரை போன்று மீண்டும் 3 நீதிபதிகளும் எல்லையை மீறி தீர்ப்பு சொல்லி உள்ளனர்.
நான் எதற்கும் பயப்படமாட்டேன். என் மீதான தேச விரோத வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதில் எனக்கு தண்டனை கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். தமிழகத்தில் மதவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்படும். இந்துத்துவா சக்திகள் அகற்றப்படும். திமுகவை துடைத்தெறிவோம் என, அமித்ஷா பேசிவிட்டு சென்றுள்ளார். அவருக்கு என்ன திமிர் இருந்தால் 75 ஆண்டு வரலாறு கொண்ட திமுகவை பற்றி அப்படி பேசியிருப்பார். திராவிட இயக்கம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். திராவிட இயக்க கோட்டையை அழிப்போம் என்பது எவராலும் முடியாது. அம்சங்கள்
கேலி, கிண்டல்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. கட்சியினரும் கவலைவேண்டாம். நான் அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. அமைச்சர் பதவி கதவை தட்டியபோதிலும் ஏற்க விரும்பாமல் சகாக்களுக்கு கொடுக்க கூறினேன். இவ்வியக்கத்தில் எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர். ஒன்றிய கவுன்சிலராக ஆக முடியாமல் உள்ளனர். அவர்கள் எல்லாம் பதவி எதிர்பார்த்து அல்ல. திராவிட இயக்கத்தை காக்க இருக்கின்றனர். எனது நேர்மைக்கு யாரும் கட்டியம், சாட்சி சொல்ல தேவையில்லை. கறைபடியாதவன் என, உலகம் அறியும். நேர்மைக்கான வாழ்கிறேன் என்பதை நாடு அறியும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், எம்பிக்கள் துரை வைகோ , சு.வெங்கடேசன், கோ.தளபதி எம்எல்ஏ, பூமிநாதன் எம்எல்ஏ, ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், மதிமுக பொருளாளர் செந்திலதிபன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். ‘வைகோ வழக்கறிஞர்’ எனும் நூலும் வெளியிட்டப்பட்டது.