

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன்
கோவில்பட்டி: திமுகவுடன் நட்புடன் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு நோபல் பரிசே தரலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக தெரிவித்தார்.
கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை வைகோ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். ஆனால், தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மத்திய அரசு வஞ்சகம் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதி கொடுத்தால் வாக்குறுதிகள் முதல்வரால் நிறைவேற்ற முடியும்.
அரசு திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. அவரிடம் திமுக அளித்த மனுவில், 356 பிரிவின் கீழ் அறிக்கை அனுப்பலாமே என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர ஏன் நினைக்கிறீர்கள், ஆளுநர் ஆட்சி என்றால் இங்கு பாஜகதான் ஆட்சி செய்யும். அப்படியென்றால், நீங்கள் பாஜகவை எதிர்ப்பதாக கூறுவதெல்லாம் நாடகமா?
முதல்வர் விஜய் கரூருக்கு செல்லக் கூடாது என்று சென்றவர்களுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி அடித்துள்ளது. இன்னொரு முறை தேர்தல் வந்தால் 180 இடங்களில் விஜய் வெற்றி பெறுவார். தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலினுடனான கருத்து பரிமாற்றம் தொடர்வதாக, திருமாவளவன் கூறியதற்கு, நோபல் பரிசே கொடுக்கலாம். இவ்வாறு கூறினார்.
பரிந்துரை செய்ததற்கு நன்றி: திருமாவளவன் பதில்
தனக்கு நோபல் பரிசு கிடைக்க பரிந்துரை செய்ததற்காக வைகோவுக்கு நன்றி தெரிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
அரியலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஒரு கூட்டணியிலிருந்து ஒரு கட்சி வெளியேறிவிட்டால் அந்தக் கட்சியை எதிரிக்கட்சியாக பார்க்கக்கூடிய, தவறான அரசியல் கண்ணோட்டம் தமிழக அரசியலில் உள்ளது. விலகிய பின்னரும் நட்புறவு கூடாதா, பாஜகவை வீழ்த்த இண்டியா கூட்டணியில் தவெகவும், திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும்.
தவெக அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்தாலும், திமுகவுடனான உறவு முடியவில்லை, நட்பு தொடர்கிறது என்றேன்.அதேபோல, விருது வழங்கும் விழாவில் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டதாகவும் சொல்லவில்லை.
இப்படி ஒரு நிலையில், எங்கள் கட்சி முன்னாள் எம்எல்ஏ ஒருவர் திமுகவில் சேர்ந்துள்ளார். இதன்மூலம் திமுக கூட்டணியில் விசிக இல்லை என உணர்த்திவிட்டார்கள். இந்த நிகழ்வை மனதில் வைத்துக் கொண்டு நாங்கள் ஒன்றும் திமுகவுடன் சண்டை போடவில்லை.
வட மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் காங்கிரசுடன் நட்பாகவும், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பாஜகவுடன் நட்பாகவும் உள்ளன. நாடாளுமன்றத்துக்குள் சண்டை போட்டுக் கொண்டாலும் வெளியில் வந்து கை கொடுத்து கொள்கிறார்கள். அந்த நாகரிகம் தமிழகத்துக்கு ஏன் வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே தவெக அமைச்சரவையில் இருந்தாலும், திமுகவுடன் நட்புடன் இருப்பதாக திருமாவளவன் கூறியிருந்தற்கு “இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என வைகோ கிண்டலாக கூறினார். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், “எனக்கு நோபல் பரிசு பரிந்துரைத்தமைக்கு நன்றி. பரிசு கிடைத்தால் அதற்கும் நன்றி’’ என்றார்.