

புதுச்சேரி: ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை. விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் விஸ்வநாதன் பேசும்போது, தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணியில் இருந்தோம். தேர்தலுக்கு முன்பாக தவெக உடன் கூட்டணிக்கு செல்லாமல், காங்கிரஸில் இருந்த குள்ளநரிகள் குழி பறித்தனர். தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. லஞ்சம் இல்லாத மாநிலமாக விஜய் ஆட்சியில் தமிழகம் உயர்ந்துள்ளது. இந்த காமராஜர் பாணி தொடர்ந்தால் 50 ஆண்டுகளுக்கு தமிழகம் திராவிட இயக்கங்கள் கையில் செல்லாது. இவ்வாறு பேசினார்.
இதேபோல் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசும்போது, 59 ஆண்டுக்கு பிறகு ஆட்சியில் பங்கு தவெகவால் சாத்தியமாகியுள்ளது. எல்லாக் காலக்கட்டத்திலும் காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பும், வியர்வையும்தான் திமுக பலமுறை ஆட்சியில் அமரக்காரணம். தனித்து திமுக போட்டியிட்டு எக்காலத்திலும் ஆட்சியை பிடித்தது இல்லை என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் விஸ்வநாதன், “தமிழக நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசி புதுச்சேரிக்கு தர வேண்டிய நீரை பெற்றுத் தர முயற்சி எடுப்போம்.
திருச்செந்தூரில் புதுச்சேரிக்காக விடுதி கட்ட தமிழக அரசு நிலம் தரக் கோரியுள்ளனர். காவிரி கடைமடை நீரில் காரைக்காலுக்கு 7 டிஎம்சி தர வேண்டியுள்ளது. அதுகுறித்து முதல்வரிடம் பேசுவோம்.
புதுச்சேரிக்கு மாநில பல்கலைக்கழகம் இல்லை. தமிழகத்தில் உலக பல்கலைக்கழகம் போன்று அமைக்க முதல்வர் விஜய் திட்டமிட்டு வருகிறார். அதில் புதுவைக்கான மாணவர் சேர்க்கை இருக்கும். புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடிவு செய்வோம்” என்றார்.
மேலும் “கடந்த கால ஆட்சியாளர்கள் ஆளுநர் உடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர். நாங்கள் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை. ஆளுநரும், முதல்வரும் அற்புதமான புரிதலுடன் பணியாற்றுக்கின்றனர். விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்” என அமைச்சர் தெரிவித்தார்.