

வைகோ
கும்பகோணம்: தற்போது திமுகவுடன் கூட்டணி, தோழமை தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து, அந்த நேரத்தில் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி அறிவிப்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஜூன் 2-ம் தேதி சென்னையில் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் அர்லேகர் மரியாதை செலுத்திய செயல் மன்னிக்க முடியாதது. இந்த செயல் தொடருமானால், ஆளுநர் எங்கு சென்றாலும் மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும்.
முதல்வர் விஜய், ஆட்சிக்குவந்து சில நாட்கள்தான் ஆகின்றன. அதிகாரத்துக்கு அவர் புதியவர். அவருக்கு 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை விமர்சிக்க வேண்டாம். முதல்வர் விஜய், செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். தவிர்க்கக் கூடாது. தற்போது திமுகவுடன் கூட்டணி, தோழமை தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து, அந்த நேரத்தில் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தைகூட்டி அறிவிப்போம்.
தமிழகத்தில் வன்முறை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அனைத்து ஆட்சிகளிலும் நடைபெற்றுள்ளன. பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, கொலை செய்பவர்களுக்கு பிணை விடுதலை வழங்காமல், வாழ்நாள் சிறை தண்டனை வழங்கும் விதமாக, குற்றவியல் சட்டத்தை திருத்தி மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி, அதை சட்டமாக்க வேண்டும். சமூகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.