திருப்பரங்குன்றம் முழுவதும் வரலாறு காணாத போலீஸ் குவிப்பு

திருப்பரங்குன்றம் முழுவதும் வரலாறு காணாத போலீஸ் குவிப்பு

படம்: நா.தங்கரத்தினம்

Updated on: 
2 min read

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் செவ்வாய்க்கிழமை மாலை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் முழுவதும் வரலாறு காணாத வகையில் சுமார் 7,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் திருப்பரங்குன்றம் கோயில், மலையைச் சுற்றிலும் 4 டிஐஜிகள், 7 எஸ்பிக்கள், 10 கூடுதல் எஸ்பிக்கள், 45 டிஎஸ்பிக்கள், 100-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் என 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை நகர், புறநகரில் இருந்து 3 ஆயிரம் போலீஸார் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் இந்தளவுக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது.

‘ட்ரோன் ’ பறக்க தடை

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், பாதுகாப்பு,பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் மலை உச்சி உட்பட மலை முழுவதும் கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வாயில், 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அனுமதியின்றி ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை செய்த சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணத்தால் ட்ரோன்களை இயக்க முற்படுவோர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய முன் அனுமதி பெறவேண்டும். உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தினத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் இன்றைக்கும் சீராய்வு மனு விசாரணைக்கு வர வாய்ப்பில்லை. இதனால் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இருப்பினும், சீராய்வு மனு நிலுவையில் இருப்பதையே காரணமாகக் கூறி, அதில் முடிவு வரும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தள்ளிப்போடும் திட்டம் உள்ளதா என்ற குழப்பமும் நிலவுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர்தான் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்து, உத்தரவை செயல்படுத்தவும், தீபம் ஏற்றிய 3-வது நாளில் அறிக்கை அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி, இந்து சமய அறநிலையத் துறை செயலர், ஆணையர், அரசு தலைமை வழக்கறிஞர் என உயர்மட்ட அளவில் தொடர் ஆலோசனை நடந்து வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், ‘உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியர்தான். அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவர் எதை செய்யச் சொல்கிறாரோ அதை செய்துதர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்ற அனைத்துப் பொருட்களுடன் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

உச்ச நீதிமன்றம் சொன்ன தீபத்தூணில் தீபம் ஏற்ற பெரிய அளவில் முன்னேற்பாடு தேவையில்லை. சிறிய அளவில் கொப்பரை இருந்தால் போதும். அதையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். அறநிலையத் துறை உயர் அலுவலர்கள் இப்பிரச்சினை தொடர்பாக எந்த முடிவையும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை’ என்றனர்.

திருப்பரங்குன்றம் முழுவதும் வரலாறு காணாத போலீஸ் குவிப்பு
“திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” - எல்.முருகன்

X