

கோவை: “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்துக்கு இன்று (நவ.23) வந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாளை (நவ.24) கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூட உள்ளனர்.
சமீபத்தில் திருச்செந்தூரில் ஏற்பட்டதை போன்ற நிர்வாக குளறுபடிகள், திருவண்ணாமலையில் நிகழாமல் இருக்க தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் அனைத்து முருக பக்தர்களின் பல நூறு ஆண்டுகால கோரிக்கையாகும். இதற்காக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முந்தைய திமுக அரசை போலவே தற்போதைய தவெக அரசும் ஆலய விவகாரங்களில் தலையிடுகிறது.
பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில், நடப்பாண்டு தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று தமிழக அரசு தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு தற்போது வரை அங்கு நம்பர் கூட ஆகவில்லை.
கோயில் விவகாரங்களில் தலையிட்டதால்தான் திமுக தோல்வியை சந்தித்துள்ளது என்பதை தவெக புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, நவாஸ்கனி எம்.பி போன்றவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம். திமுக ஆட்சி காலத்தை விட தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது. போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ளது அதன் உட்கட்சி விவகாரம், அதைப் பற்றி பேச விருப்பமில்லை. இடைத்தேர்தல் அறிவித்த பின்னர் எப்படி தேர்தலை எதிர்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.