

செங்கல்பட்டு: சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் தமிழகத்தின் முதல் ஆளில்லா சுங்கச்சாவடி நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதன் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிற்காமல் கடந்து செல்லும் வகையில் தானியங்கி கட்டணவசூல் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் இதுவரை 12 கட்டண பூத்துகள் இருந்தன.
இவற்றில் சுழற்சி முறையில் 140 பேர் பணியாற்றி வாகனசுங்கக் கட்டணம் வசூலித்து வந்தனர். தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் பலவழித்தட தடையற்ற போக்குவரத்துமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியை அடைவதற்கு சுமார் 200 மீட்டர் முன்பாகவே வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண அடையாள அட்டை (ஃபாஸ்ட் டேக்)ஸ்கேன் செய்யப்படும்.
அதேபோல், வாகனத்தின் பதிவு எண்ணும் தானியங்கி முறையில் கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைஏற்படாது.
உரிமையாளருக்கு குறுஞ்செய்தி
ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் அல்லது அதில் போதிய பணம் இல்லாத வாகனங்களின் பதிவு எண்களும் தானியங்கி முறையில் பதிவு செய்யப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அதன்பிறகும் சுங்கக் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், மின்னணு அபராதச் சீட்டு மற்றும் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்படும்.
தொடர்ந்து சுங்கக் கட்டணம் செலுத்தாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல தடை விதிக்கப்படும்.
பரனூர் சுங்கச்சாவடியில் வானொலி அலைவரிசை அடையாளக் கருவிகள், ரேடார் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வாகனப் பதிவு எண்ணை தானாகக் கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பரனூர் சுங்கச்சாவடி வழியாக நாளொன்றுக்கு சுமார் 46 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஏற்படும் நீண்ட வரிசை மற்றும் வாகன நெரிசலைத் தவிர்க்க இந்த ஆளில்லா சுங்கச்சாவடி நடைமுறை உதவும் என தெரி விக்கப்பட்டுள்ளது.