மாமல்லபுரத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

மாமல்லபுரத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை: யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமான மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் நடைபெற்ற 12-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல் முருகன் இன்று (21 ஜூன் 2026) கலந்துகொண்டார்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணைந்து இந்த யோகாதின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்த எல் முருகன், பல்வேறு யோகாசனங்களைச் செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சருடன் இந்திய கடற்படையினர், விநாயகா மிஷன்ஸ் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள், செங்கல்பட்டிலுள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகாசனங்களைச் செய்தனர்.

நிகழ்ச்சியில், ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா 365 எனும் கையேட்டை அமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய எல் முருகன், “இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான யோகா இன்று 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு நமது பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சீரிய முயற்சியே காரணம். அவரின் முயற்சிகளைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாள் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரித்தது.

நாம் அனைவரும் யோகாவை நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதன்மூலம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற நோய்களை தடுக்க முடியும். நமது வாழ்நாளை அதிகரிக்கவும் நோய்களிலிருந்து காக்கவும் யோகா துணைபுரியும் என்பதை உணர்த்தும் நோக்கிலேயே ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்பது இந்தாண்டுக்கான கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் தென்மண்டல இயக்குநர் என். கே. பதக், மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குனர் ஜெ காமராஜ், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குனர் சஞ்சய் கோஷ், இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் பல்லவா கமான்டிங் அலுவலர் கேப்டன் பி தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in