

சென்னை: மத்திய பட்ஜெட் மக்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘2026-2027 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. காரணம் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் பெண்மணியாக தொடர்ச்சியாக 9 ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது பாராட்டுக்குரியது. நிலையான பொருளாதார வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு மற்றும் இளைஞர்கள் ஆகிய 3 முக்கிய கடமைகளை உள்ளடக்கிய பட்ஜெட்டாக அமைந்திருப்பதால் பயனளிக்கும்.
வேளாண் துறைக்கு ரூ. 1,62,671 கோடி, ஊரக மேம்பாட்டுக்கு ரூ. 2,73,108 கோடி, கல்வித்துறைக்கு ரூ. 1,39,289 கோடி, சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி, சுகாதாரத்துறைக்கு ரூ. 1,04,599 கோடி போக்குவரத்துத்துறைக்கு ரூ. 5,98,520 கோடி, உள்துறைக்கு ரூ. 2,55,234 கோடி, பாதுகாப்பு துறைக்கு ரூ. 5,94,585 கோடி என பல்வேறு துறைகளுக்கு நிதியை ஒதுக்கியதால் அத்துறைகளின் மூலம் நாட்டு மக்கள் பயனடைவார்கள்.
மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு SHEE MART கடைகள், தென்னை மேம்பாட்டுத்திட்டம், பால் உற்பத்தியை அதிகரிக்க, கோழி வளர்ப்பை ஊக்குவிக்க, 5 பல்கலை நகரங்கள், மாவட்டம் தோறும் மாணவிகளுக்கான விடுதிகள், 5 மருத்துவ மையங்கள், காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களுக்காக – மகாத்மாகாந்தி கிராம சுவராஜ் திட்டம், பயோ பார்மா சக்தி திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு, மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் 2 ஆம் நிலை, 3 ஆம் நிலை நகரங்கள் மற்றும் கோயில் நகரங்களை மேம்படுத்த உட்கட்டமைப்புக்கு,
ஜவுளித்துறைக்கு புதிய மெகா ஜவுளி பூங்காக்கள், வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பிரதான செயல்திட்டம், மாநில அரசுகளுடன் இணைந்து சந்தன மர வளர்ப்பு, கடலோர சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த, புதிய தேசிய நீர்வழித்தடங்கள், மீன் உற்பத்தியை பெருக்க, வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வருமான வரி விலக்கு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்ததால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேற முடியும்.
குறிப்பாக தமிழகத்திற்கு பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் - அரிய வகை கனிமங்கள் எடுப்பதற்கான வழித்தடம், சென்னை – பெங்களூரு - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடம், பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா வழித்தடம், பழவேற்காட்டில் உலகத்தரத்தில் பறவைகள் காட்சி மையம் ஆகியவை தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்.
எனவே மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பட்ஜெட்டை வரவேற்று மத்திய நிதி அமைச்சரை பாராட்டி, வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்தார்.