

இலைக் கட்சியின் அதிருப்தி கூட்டத்துக்குள் இருக்கும் குறிச்சி மாவட்டத்தின் ‘ஷ்’ எம்எல்ஏ-வானவர் ‘குருவான’ மாவட்டச் செயலாளரை பிடிக்காமல் தான் இந்த முடிவுக்கு வந்தார். அப்படி வந்ததும் அவருக்கு இப்போது நல்வாய்ப்பாக அமைந்துவிட்டதாம்.
ஆளும் கட்சி மந்திரிகளிடம் ’லிங்க்’ வைத்துக் கொண்டு நல்லது கெட்டதை நலமாகச் ’சாதித்துக்’ கொள்கிறாராம். தொகுதி மக்களுக்கும் ஏதோ தன்னால் முடிந்த உதவிகளை ஆளும் கட்சி சப்போர்ட்டில் சாதித்துக் கொடுக்கிறாராம். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஆளும் கட்சியினரைவிட இவரது செல்வாக்கு தான் கொடிகட்டிப் பறந்ததாம்.
இத்தனை எல்லாம் செய்தாலும் விழுப்புரம் மாவட்டத்தின் அதிரடி ’முகம்’ எம்எல்ஏ என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ‘ஷ்’.
அதேசமயம், எப்போது விசில் பார்ட்டியில் சேரப் போகிறீர்கள் என்று யாராவது கேட்டால், “நான் பரம்பரை அதிமுககாரன். அப்படி எல்லாம் எந்தக் கட்சிக்கும் போகமாட்டேன்” என்று டச்சிங் டயலாக் பேசுகிறாராம்.
இந்தத் தகவலை அறிந்த இலைக் கட்சி தலைமை, நேரடியாக இவரிடம் பேசாமல், சின்னச் சேலத்தில் இருக்கும் இவரது தந்தையிடம் தூதுவர்களை அனுப்பியதாம்.
அவரோ, “மாவட்டச் செயலாளரை மாற்றுங்கள். இளைஞரான எனது பையனை மாவட்டச் செயலாளர் ஆக்கச் சொல்லுங்கள்” என்று டிமாண்ட் வைத்தாராம். இது நடக்க வாய்ப்பே இல்லை என்பதால், “உங்க மகன அவரு இஷ்டம் போலவே முடிவெடுக்கச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்களாம் இலைத் தலைமையின் தூதுவர்கள்.