

தலைநகரில் இருக்கும் உயர் நீதிமன்ற வளாகத்தில் சுமார் 70 நீதிமன்றங்கள் இருக்கின்றன. இவற்றுள் அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது அது தொடர்பான தகவல்களை தாமதமின்றி தெரிவிப்பதற்காக உளவுப் போலீஸார் பணியில் இருக்கிறார்கள். சிட்டியில் இருக்கும் காவல் உயரதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்கள் தரப்பில் இதற்காக சிஐடி-க்களை வைத்திருக்கிறார்கள்.
இது ஒவ்வொரு ஆட்சியிலும் தொடரும் நிலையில், தற்போது இந்தப் பணியில் இருக்கும் உளவுப் புலிகளில் சிலர் முந்தைய ஆளும் கட்சிக்குத்தான் இன்னமும் விசுவாசமாக இருக்கிறார்களாம். இவர்கள் நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக தங்களின் பாஸுக்கு தகவல் சொல்வதற்கு முன்பாக எதிர்க்கட்சி முகாமுக்கு காப்பி போட்டுவிடுகிறார்களாம்.
இதனால், ஆளும் கட்சி சோம்பல் முறித்து எழுந்து வருவதற்குள் எதிர்க்கட்சி தரப்பில் துரிதமாகச் செயல்பட்டு அரசுக்கே நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக உடனடி சட்ட நடவடிக்கைகளை எடுத்துவிடுகிறார்களாம். இது பெரும்பாலான நேரங்களில் ஆளும்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறதாம்.