“அரசியலில் திமுக தான் சீனியர்” - சட்டப்பேரவையில் உதயநிதி சுவாரஸ்யப் பேச்சு

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: “முதல்வரும், நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இருந்தாலும் அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர் பேட்ச். 1967-லேயே ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை ஏற்க நீங்களும் தயாராக இருங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் இன்று தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “தமிழ்நாட்டில் இனி நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து 2-ம் இடத்திற்குச் செல்லக்கூடாது. அதனை இந்த அரசு அனுமதிக்கக் கூடாது. நாங்களும் அனுமதிக்க மாட்டோம். முதல்வர் பதவியேற்பு விழாவில் நடந்த தவறை, ஆளுநர் உரையின்போது நடக்க அனுமதிக்கக் கூடாது; நாங்களும் அனுமதிக்க மாட்டோம்.

முதல்வர் விஜய் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த அரசியல் நாகரீகம் இந்த சட்டப்பேரவையிலும் தொடர வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. திமுக இந்த சட்டப்பேரவையில் எதிரி கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

முதல்வரும், நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இருந்தாலும் அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர். 1967-லேயே ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. எங்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை ஏற்க நீங்களும் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் எப்போதும் நமக்கு தமிழகத்தின் நலம்தான் முக்கியம்.

இந்தியாவே திரும்பி பார்த்த சட்டப்பேரவை இது; இங்கு ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடம் கொடுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

நாம் இப்போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எதிரெதிர் வரிசையில் அமர்ந்திருந்தாலும், தமிழக மக்களின் நலன் என வரும்போது, முன்வரிசையில் நின்று உழைக்க வேண்டும்.

ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும், திமுக தோழமை இயக்க உறுப்பினர்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் புதிய அரசு மற்றும் முதல்வருக்கும் எனது வாழ்த்துகள். இது எனது அரசல்ல; நமது அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வார். அதே போல இந்த அரசும் அனைவருக்குமான அரசாக செயல்பட வேண்டும்.

தற்போது இங்கு முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகளவில் வந்திருப்பது மகிழ்ச்சி. மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். வெல்க தமிழ்; வாழ்க தமிழ்நாடு” இவ்வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>உதயநிதி ஸ்டாலின்</p></div>
சபாநாயகரை கைப்பிடித்து அமரவைக்கும் மரபு! - பேரவையில் குட்டிக் கதை சொன்ன முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in