“தவெக அரசின் பட்ஜெட்டில் ‘பெயர் மாற்றம்’ மட்டுமே உள்ளது” - உதயநிதி விமர்சனம்

“தவெக அரசின் பட்ஜெட்டில் ‘பெயர் மாற்றம்’ மட்டுமே உள்ளது” - உதயநிதி விமர்சனம்
Updated on
2 min read

சென்னை: “100 நாளில் தவெக அரசின் மதிப்பெண் என்ன என்று யாரிடம் கேட்டாலும் பெரிய பூஜ்ஜியம் என சொல்வார்கள். அதேபோல் தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டும் பூஜ்ஜியம் மதிப்பெண்ணை பெற்றுள்ளது. ஆட்சிக்கு வரும்போது மாற்றம் என்றார்கள். என்ன மாற்றம் என்றால் ‘பெயர் மாற்றம்' தான்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, “கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். ஆட்சிக்கு வரும்போது மாற்றம் என்றார்கள். என்ன மாற்றம் என்றால் ‘பெயர் மாற்றம்' தான். அனைத்து திட்டத்தின் பெயரையும் மாற்றியுள்ளார்கள். கலைஞர் மகளிர் உரிமை தொகையை உயர்த்தி தருவதாக சொன்னார்கள். ஆனால் அதைப் பற்றி அவர்கள் வாயே திறக்கவில்லை.

ஒவ்வொரு துறையை பற்றியும் நிதியமைச்சர் மரிய வில்சன் பேசும்போது இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்கிறது என்று கூறினார். ஒரு வழியாக திராவிட மாடல் அரசின் சாதனைகளை எல்லாம் இப்போதாவது ஒப்புக்கொண்டுள்ளார்களே. அதற்கு நிதியமைச்சர் மற்றும் முதல்வருக்கு நன்றி.

மக்கள் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத் தொடர் முழுவதும் திமுக கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கும். எங்களின் கேள்விகளுக்கெல்லாம் தவெக அரசு பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும்.

‘அன்பு சோலை’ என நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு ‘முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்’ என்றும் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற லேப்டாப் திட்டத்துக்கு ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ என்றும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்துக்கு ‘வெற்றி வீடு திட்டம்’ என்றும் ‘முதல்வர் படிப்பகங்கள்’ திட்டத்துக்கு ‘டிஜிட்டல் நூலகம்’ என்றும் ‘நன்னிலம்’ திட்டத்துக்கு ‘மண்ணின் மகள் திட்டம்’ என்றும் பெயரை மாற்றியிருக்கிறார்கள்.

காவிரியில் தண்ணீர் வரவில்லை. ஆடி 18-ல் கூட தமிழ்நாட்டு ஆறுகளில் தண்ணீர் வராத ஒரு நிலையைதான் தவெக அரசு உருவாக்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஜூலையில் காவிரி நீர் வரத்து குறைந்து காணப்படுவதாக, நாளிதழ் ஒன்றில் கட்டுரை வெளியாகியுள்ளது.

இந்த ஆட்சி அமைந்ததில் அதிகம்' பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் தான். தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த பிரச்சினைகளை நான் பேசினேன், அதற்காக என்னை வீடு புகுந்து கைது செய்தார்கள். விவசாய பிரச்சினைகளை மடைமாற்றவே இந்த கைது நடவடிக்கை நடந்தது.

மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவை தடுக்க வக்கில்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த 5 வாரங்களில் 4 காவல் மரணங்கள் நடந்துள்ளன. 5 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.

தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினால், முதல்வர் பதிலளிக்க மாட்டார்; முதல்வருக்கு பதில் பொதுப் பணித்துறை அமைச்சர் தான் பதில் சொல்வார் என முதல்வருக்கு முன் ஜாமீன் வாங்குகிறார். இதுபோன்ற நகைச்சுவையை இந்திய ஜனநாயகம், எந்த சட்டம்னறத்திலும் பார்த்திருக்காது.

மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது தவெக அரசு” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தவெக அரசின் பட்ஜெட்டில் ‘பெயர் மாற்றம்’ மட்டுமே உள்ளது” - உதயநிதி விமர்சனம்
பட்டா நிலத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதியில்லை: உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in