

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவீர்களா? என்ற கேள்விக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்காக சிறப்பான பணிகளை மேற்கொண்டோம். இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை எதிர்பார்த்தேன்.
எனினும், மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்; மதிக்கிறோம். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக யார் பொறுப்பேற்பது என்பது குறித்துகட்சித் தலைவரும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். யூகத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
மு.க.ஸ்டாலினை என் தந்தையாக மட்டும் பார்க்க மாட்டேன். எனக்கு எப்போதுமே அவர் தலைவர்தான். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பளித்து இருக்கின்றனர். அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக என்னுடைய பணிகள் இருக்கும்.
எப்போதும் சுய பரிசோதனை என்பது தேவைதான். திமுக பார்க்காத தோல்வியும் கிடையாது. திமுக பார்க்காத வெற்றியும் கிடையாது.
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தோல்வியைத் தழுவியிருக்கிறார். இது தொடர்பாக நீதிமன்றம் செல்வதற்கு திமுக தலைவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.