“கொள்கையே தெரியாத வெற்றுக் கூட்டம்” - தவெக மீது உதயநிதி மறைமுக சாடல்

உதயநிதி

உதயநிதி

Updated on
1 min read

சென்னை: “கட்டுப்பாடில்லாமல் வெற்றுக் கூச்சல் போடுகிற கூட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லை” என்று விஜய்யின் தவெகவை மறைமுகமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாடினார். மேலும், “எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய முரட்டு அடிமை” என்று அவர் விமர்சித்தார்.

திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விருதுநகரில் இன்று நடைபெற்றது. அதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “கொள்கை, லட்சியம் என்றால் என்னவென்றே தெரியாமல், கட்டுப்பாடு இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் ஒரு கூட்டம் தமிழகத்தில் சுற்றுகிறது. அவர்களால் தமிழகத்துக்கு எந்தவொரு பயனும் கிடையாது. அவர்களால் அவர்களுக்கே பலனில்லை.

திமுகவுக்கு வயது 76. அதே வீரத்துடன் இளமையுடன் இருக்கிறது. திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் சங்கிகளுக்கு கோபமும், எரிச்சலும் ஏற்படுகிறது.

தேர்தல் வந்தால்தான் பிரதமர் மோடிக்கு தமிழகம் நினைவுக்கு வரும். இனி பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வருவார். திருக்குறள் சொல்வார், கடலுக்கு அடியில் சென்று தியானம் செய்வார். வழக்கம் போல பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். முரட்டு அடிமை தெரியுமா? எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய முரட்டு அடிமை. பாஜகவின் கிளையாக அதிமுக இருந்தது. தற்போது பாஜகவின் இலையாக மாறிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி அவர்களே... தலையை நிமிர்த்தி வழியை பார்த்து நடந்தால்தான் நேராக நடக்க முடியும். நீங்கள் மோடியின் காலையும், அமித் ஷாவின் காலையும் பார்த்துக் கொண்டே நடந்தால் உங்களை போல் முட்டுச் சந்தில்தான் போய் நிற்க முடியும். தமிழகத்தில் 10 தோல்வி பழனிச்சாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் கூட்டணி வைத்தாலும் தமிழக மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழ்நாடுக்கு டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் நாங்கள் திராவிட மாடல் என்கிற சிங்கிள் இன்ஜினை வைத்துக்கொண்டே, ஏற்கெனவே டபுள் டிஜிட் வளர்ச்சியை எட்டிவிட்டோம்.

நீங்கள் சொல்லும் டபுள் இன்ஜின் என்னும் டப்பா இன்ஜினை வைத்துக்கொண்டு பிஹார், உ.பி போன்ற மாநிலங்கள் இன்னும் 6% வளர்ச்சியை கூட எட்டவில்லை.

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றி தருவார். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>உதயநிதி </p></div>
‘‘உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி!’’ - மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in