

சென்னை: ‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில், திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீதான நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி: திருச்சியில் திமுக மாநகர செயலாளர், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான திமுகவினர் மத்திய பேருந்து நிலையம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று வன்னாங்கோவில் அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை ராம்ஜி நகர் போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம்: கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயில் முன் திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு துணை மேயரும், திமுக மாநகர செயலாளருமான சு.ப.தமிழழகன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன், கவுன்சிலர்கள் முருகன், அனந்தராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.
அப்போது போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றபோது, போலீஸாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கும்பகோணத்தில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்பகோணம் போராட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெரியார் தூண் பகுதியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் தவெக அரசு மற்றும் காவல் துறையைக் கண்டித்து தீவிர முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் 200 பேரை காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாநகரச் செயலர் சி.கே.வி.தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் உத்திரமேரூர் பகுதியில் முன்னாள் எம்.எம்.ஏ. சுந்தர் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டு தவெக அரசுக்கு எதிராகவும், காவல் துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட கீதாஜீவன் உள்ளிட்ட 100 பேரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர்: உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் எம்.பி தனுஷ் குமார், நகர செயலாளர் அய்யாவு பாண்டியன் தலைமையில் திமுக நிர்வாகிகள் ஆண்டாள் கோயில் தேரடியில் இருந்து ஊர்வலமாக சென்று, பேருந்து நிலையம் முன் முதல்வர் விஜய்யை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய திமுகவினர், அவரது உருவ படத்தை செருப்பால் அடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முன்னாள் எம்.பி உட்பட 50-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி போராட்டம்
படங்கள்:ஏன்.ராஜேஷ்
தஞ்சாவூர்: உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலைக்கு ஊர்வலமாக சென்று, அங்கு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் டிகேஜி.நீலமேகம், எம்.ராமச்சந்திரன், மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி, மாநகர செயலாளர் சண்.ராமநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுகவினர் முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, விஜய்க்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் போராட்டம்
அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக மகளிர் அணியினர் பனகல் கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக எம்எல்ஏ ஆர்.விஜய்சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து திமுகவினரும், தவெகவினரும் கூச்சலிட்டபடி செருப்பு, கற்களை வீசிக் கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்: ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர், முன்னாள் எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட திமுகவினர் 30-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதே போல், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளிலும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் போராட்டம்
விருதுநகர்: விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே திமுக சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னசு ஆகியோர் தலைமை வகித்தனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோன்று, அருப்புக்கோட்டை, சாத்தூர், வத்திராயிருப்பு, தளவாய்புரம், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.
உதயநிதி கைது ஏன்?
மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தடுக்கத் தவறவிட்டதாக கூறி திமுக சார்பில் நேற்று தஞ்சாவூரில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார். தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறான கருத்துகளையும், பெண்களை மையப்படுத்தி ஆபாசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சு குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட காவல் துறையிடம் தவெகவின் தஞ்சாவூர் மத்திய மாவட்ட அமைப்பாளரான பைரவி புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி மீதி தஞ்சை மாவட்ட காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் போராட்டம்
தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் 196, 192, 352, 79, 296(b), 61, 351(2) பிரிவுகள்; தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் 4வது பிரிவு; தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67வது பிரிவு ஆகியவற்றில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, சென்னையில் இருந்த உதயநிதியை கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுத்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் முறையிடப்பட்டது. முறையீட்டை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுவை பிற்பகல் விசாரிப்பதாகவும், அதுவரை கைது நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இதற்கிடையில் அவரை கைது செய்த காவல் துறையினர், தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் உதயநிதியின் முன் ஜாமீன் மனு, பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அப்போது அவர், “எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுவதாகவும், காவல் நிலையத்தில் விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை முடித்து இன்றே விடுவிக்க வேண்டும் எனவும், விசாரணையை நாளை வரை நீட்டிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். மேலும், காவல் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உதயநிதிக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செய்தித் தொகுப்பு:
என்.மாதவன், சி.எஸ்.ஆறுமுகம், ரெ.ஜாய்சன், அ.கோபாலகிருஷ்ணன், இ.மணிகண்டன், இரா.நாகராஜன், வி.சுந்தர்ராஜ்