

லால்குடியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிய கட்டுமானங்களைத் திறந்து வைத்துப் பேசியதாது: திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ந்து வரும் ஊர் லால்குடி. திமுக ஆட்சியில், மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமான அன்பில் தர்மலிங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சர் கே.என்.நேரு, எனக்கு பக்கபலமாக உள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என 3 அமைச்சர்களை தந்த ஊர் லால்குடி. திருச்சி பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டிய அமைச்சர் நேரு, முதல்வரிடம் தெரிவித்து அவரது சொந்த ஊரிலும் பேருந்து நிலையம் மட்டுமின்றி நகராட்சி அலுவலகமும் கொண்டு வந்துள்ளார்.
மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையை தேர்தலைக் காரணம் காட்டி எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என சிலர் சூழ்ச்சி செய்தனர். ஆனால், அதை தெரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்கள் சேர்த்து ரூ.3 ஆயிரம், கோடை கால சிறப்புத் தொகையாக ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளார். அத்துடன் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் இந்தத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் மகளிர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இத்திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் இதனால் அதிர்ச்சியில் உள்ளனர்.
ரூ.250 கோடியில் லால்குடி- புள்ளம்பாடி கூட்டுக்குடிநீர் திட்டம், லால்குடி அரசு மருத்துவமனைக்கு 12 அறைகள் கொண்ட புதிய கட்டிடம், வட்டாட்சியர் அலுவலகம், கால்நடை மருந்தகங்கள், சார்பதிவாளர் அலுவலகம் என லால்குடி தொகுதி முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்த அரசுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.