

திருநெல்வேலி: திமுக எம்எல்ஏக்களை கைது செய்வதையும், அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதையும் தவெக அரசு முழுநேரபணியாகச் செய்து வருகிறது என்று, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திக்குளம் தொகுதி எம்எல்ஏ .வி.மார்க்கண்டேயன், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக சிறையில் உள்ள அவரை, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேற்று வந்து மார்க்கண்டேயனை சந்தித்து நலம் விசாரித்தார். 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, ‘மார்க்கண்டேயனுக்கு தேவையான சட்ட உதவிகளை திமுக வழங்கும்’ என்று உதயநிதி உத்தரவாதம் அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள மார்க்கண்டேயன் நலமுடன் தைரியமாக இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வதை மட்டுமே இந்த அரசு பணியாக மேற்கொண்டு வருகிறது. இந்த அரசு வேறு எதையும் செய்யவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது அவர்கள் கட்சியினரே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள். அதுகுறித்து சட்டப்பேரவையில் பேசியுள்ளேன். ஆனால், அந்த நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
திமுக நிர்வாகிகளையும், எம்எல்ஏக்களையும் கைது செய்வதும், அதிமுக எம்எல்ஏக்களை சோபா கொடுத்து விலைக்கு வாங்குவதையும், இந்த அரசு 24 மணி நேரமும் முழு நேரப் பணியாக மேற்கொண்டு வருகிறது. சோபா கொடுத்து யாரை விலைக்கு வாங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது, தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர்கள் ஆவுடையப்பன், அப்பாவு,முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், அப்துல்வகாப் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.