

சென்னை: யுபிஎஸ்சி தேர்வுகளில் பீடி சுற்றும் தொழிலாளி மகள் முதல் விவசாயி மகள் வரை தேர்ச்சி பெற்றுவதற்குக் காரணமாக அமைந்த ‘நான் முதல்வன்’ திட்டம், யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் சரிவை மீட்டெடுத்ததாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக வளர்ச்சிப் பாதையில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது. கல்வியும், வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாகும்.
எனினும், 2017-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணி தேர்வுகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. 2021-ல் தேர்ச்சி விகிதம் 27-ஆக சரிந்ததை கண்டறிந்த தமிழக அரசு, அதை சரிசெய்ய ‘நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு’ என்ற புதிய முன்னெடுப்பை 2023-ல் தொடங்கியது.
பெருநகரங்களுக்கு வெளியே வசிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான பயிற்சியும், வழிகாட்டுதலும் கிடைக்காததே சரிவுக்குக் காரணம் என்பதை உணர்ந்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரையில் தங்குமிடம் மற்றும் உணவுடன் கூடிய சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
659–ஆக உயர்வு... இதன் விளைவாக, 2023-24-ம் ஆண்டில் 453 பேரும், 2024-25-ம் ஆண்டில் 559 பேரும் தேர்ச்சி பெற்றனர். நடப்பு 2025-26-ம் ஆண்டில் தேர்ச்சியாளர்கள் எண்ணிக்கை 659-ஆக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 155 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் 87 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என்பதே, அரசின் திட்டத்துக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும். குடிமைப் பணித் தேர்வுகளை தொடர்ந்து தற்போது எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரி... தென்காசியை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் இன்பா ஐபிஎஸ் அதிகாரியானதும், தருமபுரியைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி வங்கி அதிகாரியானதும் இத்திட்டத்தின் உண்மையான வெற்றிக்கு சான்றுகளாக அமைந்துள்ளன.
பொருளாதாரச் சூழல் அல்லது வசிப்பிடம் ஒருவரது வெற்றிக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள திமுக அரசு, தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.