

மாதவரம் தொகுதி திமுக வேட்பாளரான தற்போதைய எம்எல்ஏ எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து மாதவரம் பஜார் பகுதியில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை: மாதவரம் தொகுதியி்ல் ஏற்கெனவே இருமுறை தொடர்ச்சியாக வெற்றிபெற்று எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.சுதர்சனம் மூன்றாவது முறையாக திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரான வி.மூர்த்தி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாதவரம் பஜார் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மாதவரம் தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மூர்த்தி எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆவின் பாலில் கலப்படம் செய்து ஊழல் செய்தவர். அதனால் அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. திமுக வேட்பாளர் மாதவரம் சுதர்சனத்தைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
எளிமையானவர். தொகுதி மக்களை அரவணைத்து செல்பவர். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
கடந்தமுறை 57 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்தீர்கள். இம்முறை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவரை 3-வது முறையாக பேரவைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.