

சென்னை: கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது ஏன் என்று சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார். அதற்கு உடனடியாக முதல்வர் விஜய் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ தமிழ்நாடு விவசாயிகளின் வேதனைக்கு இந்த அரசு சரியான தீர்வை காண வேண்டும் என இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளோம். இந்த தீர்மானத்தை கொண்டுவர நான்கு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை தடுக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்து இந்த அவைக்கு தெரிவிக்க வேண்டும். இரண்டாவது காரணம், முழு பயிர்க்கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு அரைகுறை தள்ளுபடி செய்வது ஏன்?.
மூன்றாவது காரணம், காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி இன்று இல்லாமல் போய்விட்டது. இதற்கு தகுந்த நிவாரணத் தொகையை இந்த அரசு எப்போது விவசாயிகளுக்கு கொடுக்கப் போகிறது?. நான்காவது காரணம், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை கொடுக்க வேண்டும்.
தவெக ஆட்சி அமைந்தது முதல் மேகேதாட்டு அணை கட்டுவதில் இதுவரை காட்டாத வேகத்தையும், தீவிரத்தையும் கர்நாடக அரசு காட்டி வருகிறது. இதற்காக ஒரு முறை மட்டும் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்தார். மேகேதாட்டு விவகாரத்தில் ஜூன் 19ல் ஒரு தீர்மானத்தை இந்த அவையில் நிறைவேற்றியது. தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் ஆலோசனை சொன்னோம். அப்போதுதான் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என காட்ட முடியும்.
திமுக மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளும் மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. கர்நாடக முதல்வரும், அந்த அரசும் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகின்றன.
மத்திய நிதியமைச்சர், ஜல்சக்தி துறை அமைச்சர் உள்ளிட்டோரை கர்நாடக முதல்வர் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்தி இணையமைச்சர் மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என சொல்லியுள்ளார். அதன்பின்னர் கர்நாடகாவில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை முதல்வர் சிவகுமார் கூட்டியுள்ளார். இப்படி கடந்த ஒரு மாதத்தில் படிப்படியாக பல நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்துள்ளது.
இப்படி மாநில நலன் என வந்தால் கட்சி வேறுபாடுகளை கடந்து எப்படி கர்நாடகாவில் ஓரணியில் நிற்கிறார்களோ, அதே போல நாமும் நிற்க வேண்டும் என சொல்கிறோம். ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி. நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பிறகு ஜூலை 28ல் இரண்டாவது கடிதத்தை பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ளார். மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது பிரதமருக்கு கடிதம் எழுதியதை இப்போதைய முதல்வர் விமர்சித்துள்ளார்.
இந்த அரசு ஒரு புது டெக்னிக்கை கடைபிடிக்கிறது. ஏதாவது ஒன்றை செய்வதற்கு முன்பு அதனை கசிய விடுகிறார்கள். முதல்வர் விஜய் கர்நாடகா செல்கிறார் என வேளாண் துறை அமைச்சர் முதலில் தெரிவித்துவிட்டு, பிறகு மறுத்துப் பேசினார். பிறகு 2 அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சொன்னார்கள். பின்னர் 13 பேர் கொண்ட குழு செல்வதாக சொன்னார்கள்.
அதன்பின்னர் , தமிழக முதல்வர் இங்கே வரவேண்டாம், தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் சொல்லிவிட்டார். தமிழக முதல்வர் கர்நாடகா செல்ல இருந்தாரா? அப்படியானால் அவர் ஏன் செல்லவில்லை? இதற்கு முதல்வர் பதில் சொல்லவில்லை. முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளை சந்தித்து முதல்வர் பேசவேண்டும். எங்கள் ஆட்சியில் 6.5 லட்சம் ஹெக்டர் குறுவை சாகுபடி நடந்தது. இந்த ஆட்சியில் 1.5 லட்சம் ஹெக்டேர் தான் சாகுபடி நடந்தது. குறுவை தொகுப்பு எத்தனைப் பேருக்கு வழங்கியுள்ளார்கள் என்பதை தெரிவிக்கவேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் விஜய், “ காவிரி நமக்கு உயிர் ஆதாரம். காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட இல்லை. மேகேதாட்டு விவகாரத்தில் நாம் சேர்ந்து கொண்டுவந்த தீர்மானத்தை பிரமரிடம் நேர்முக கடிதமாக அளித்துள்ளோம். அதோடு அப்படியே இருந்துவிட வில்லை. மத்திய ஜல்சக்தி இணையமைச்சர் மேகேதாட்டு அணை பற்றி முழுவிவரங்களை குறிப்பிடவில்லை என தெரிந்ததும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விவரங்களை குறிப்பிட்டு அடுத்த நாளே பிரதமருக்கு நேர்முக கடிதம் எழுதினோம்.
எனவே காவிரி நதிநீர், மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் உரிமையை நாம் விட்டுத்தர மாட்டோம். கர்நாடகாவில் சில அணைகள் கட்ட ஆரம்பித்தபோது இதே அவையில் 1969ம் ஆண்டு விவாதம் நடந்துள்ளது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்போது அணை கட்ட விட்டது ஏன் என்று கேட்டு மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி விவகாரத்தை மிக கவனமாக கையாள வேண்டும். சட்டப்படி இந்த விவகாரத்தை அணுகுவதில் உறுதியாக உள்ளோம். இருந்தாலும் ஒரு முயற்சி எடுப்போம் என நினைத்துதான் பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன்.
அந்த பயணம் பற்றி யோசித்து கேட்டது நான் தான். நான் கர்நாடக செல்ல முயற்சித்ததற்கு காரணம், இப்போது பகை நாடுகளே பிரச்சினைகளை பேசித்தீர்க்க பார்க்கிறார்கள். அப்படி இருக்கையில், பக்கத்து மாநிலத்தோடு பேசிப் பார்த்தால் என்ன என்று இந்த முடிவை எடுத்தேன். இதில் ஒருவேளை ஏதேனும் அவமானம் நேர்ந்தால், தமிழக மக்களுக்காக அதையும் தாங்க தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.
குறுவை சாகுபடிக்கு நிவாரண தொகுப்பு ஏற்கெனவே கொடுத்துவிட்டோம். அரசியலே நாங்கள் தான் என சொல்லிக்கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது எனத் தெரியவில்லை. பேப்பர் படித்திருந்தால் இது தெரிந்திருக்கும்” என்றார்.
அதன்பின்னர் உரையை தொடர்ந்த உதயநிதி ஸ்டாலின், “ குறுவை தொகுப்பு திட்டம் என்பது எல்லா அரசுகளும் கொடுப்பதுதான். இப்போது வறட்சி நிவாரணம் கேட்கிறார்கள். இதற்கான வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, விவசாயிகளிடம் கலந்து பேசி கோரிக்கைகளை தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.