

எழும்பூரில் புனரமைக்கப்பட்டுள்ள ஆவணக் காப்பகக் கட்டிடம், புதிய கண்காட்சி கூடத்தை நேற்று திறந்துவைத்துப் பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன் மற்றும் இ.பரந்தாமன் எம்எல்ஏ, உயர் கல்வித்துறை செயலர் பொ.சங்கர் உள்ளிட்டோர்.
சென்னை: எழும்பூரில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட ஆவணக் காப்பகத்தின் பழமையான கட்டிடம், ரூ. 15 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் நிர்வாகம் சார்ந்த அரிய ஆவணங்களைப் பாதுகாத்து வரும் தனது சேவையில் நூறு ஆண்டுகள் கடந்து சாதனை படைத்து வருகிறது.
கடந்த 1909-ம் ஆண்டு மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, 1973-ல் தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி ஆவணக் காப்பகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2009-ம் ஆண்டு தனது 100-வது ஆண்டை நிறைவு செய்தது. சுமார் 40 கோடி ஆவணங்களை கொண்டுள்ள இக்காப்பகம், ஆராய்ச்சியாளர்களின் மிகச் சிறந்த தேடல் களமாக உள்ளது.
இந்நிலையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் பழமையான தலைமை அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.15 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அத்துடன், ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 100 வருடங்கள் பழைமையான 10 லட்சம் அரிய ஆவணங்களை ஜப்பானிய திசு முறையில் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
நவீன கண்காட்சிக் கூடத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதை விவரிக்கும் ஆவணம், மெட்ராஸ் ராஜதானி, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆவணம், சென்னையை எம்டன் கப்பல் தாக்கியது குறித்த ஆவணம் உள்ளிட்ட அரிய வரலாற்று ஆவணங்கள் பொதுமக்களும், மாணவர்களும் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, உயர் கல்வித்துறை செயலர் பொ. சங்கர், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் சு. மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.