

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில் அண்மையில் வெளியான ஒரு வீடியோவில் ஒருவர் தன்னை வலதுசாரி அமைப்பான கர்னி சேனாவின் செய்தித் தொடர்பாளர் ராஜ் சிங் என்று அறிமுகம் செய்துகொள்கிறார்.
அவர் அந்த வீடியோவில், “சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவை 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டியதால் பாஜக மற்றும் கர்னி சேனா தொண்டர்கள் கோபம் அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் நாங்கள் அந்த எம்.பி.க்களின் வீடுகளுக்குள் நுழைந்து சேதப்படுத்துவோம். இந்த சம்பவம் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் நடந்ததாக நான் நம்புகிறேன்.
ராகுல், கவனமாகக் கேளுங்கள், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால், நாங்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து உங்களைச் சுடுவோம். அந்த எம்.பி.க்களை 24 மணி நேரத்துக்குள் கைது செய்யாவிட்டால் அனைவரையும் சுட்டுக் கொல்வோம்" என்று மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக ராஜ் சிங்கை ராஜஸ்தான் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.