

இடது: அன்பில் மகேஸ் பொய்யாமொழி | வலது: மு.க.ஸ்டாலின்
சென்னை: ‘அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அன்பில் மகேஸை கைது செய்துள்ளார்கள். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் தவெக அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது’ என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை கைது செய்துள்ள தவெக அரசுக்குக் கடும் கண்டனம்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஸை கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது’ எனத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் 2021-26 காலக்கட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பதவி வகித்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக அன்பில் மகேஸ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த முன்ஜாமீன் மனுவை இன்று காலையில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸ், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.