

திருச்சி: காவிரி பிரச்சினை தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த பின் விடுக்கப்பட்ட அவர், சென்னை செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று இரவு கூறியது: தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் நடைபெற்றற ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்களை பற்றித்தான் பேசினேன். தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து பேசவும் தைரியம், தெம்பு இல்லை. எனவே முதல்வர் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
நாங்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத திராணியில்லாத டம்மி முதல்வர் நமக்கு வாய்த்துள்ளார். அதையெல்லாம் விட்டுவிட்டுநான் பேசாத ஒரு விஷயத்தை ‘கட் காபி பேஸ்ட்’ செய்து சில விஷயங்களை சேர்த்துள்ளனர். இந்த அரசின் கொள்கையே திசைத் திருப்பும் யுக்தி தான்.
நான் பேசாத விஷயத்தை திரித்து பரவவிட்டுள்ளனர். போலீஸார் கைது செய்ய வந்தனர். நானும் முழு ஒத்துழைப்பு அளித்தேன். நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கைது செய்யும் நோக்கம் கிடையாது, விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றார். போலீஸார் முறையாக நடத்தவில்லை.
நான் எந்தவிதமாக தவறான எண்ணத்தில், புண்படுத்த வேண்டும்; பெண்களை தாழ்த்திப் பேச வேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட கிடையாது. என்குடும்பம் என்னை அப்படி வளர்க்கவில்லை.
எனக்கு திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தை, தங்கை உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தாய்மாரும் எனது தாயாக, தங்கையாக நினைக்கிறேன். பொய் வழக்கு போட்டு அச்சுறுத்த நினைத்தனர். அதற்கு பயப்படும் ஆள் நான் இல்லை.
சில தலைவர்கள் நான் பேசியதை பார்க்காமல் ஆராயாமல் நான் தவறாக பேசியதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னை கைது செய்ததற்காக நான் பயப்பட மாட்டேன். நான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன். தொடர்ந்து பேசுவேன். இந்த அரசுக்கு நிச்சயம் மக்கள் பதிலை தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.