

திருவண்ணாமலை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘உதயநிதி மட்டும் எனது வாரிசு கிடையாது.
இங்கு கூடியுள்ள அனைவரும் எனது கொள்கை வாரிசுகள்’ என்றார். அத்தகைய கொள்கை வாரிசுகள் இங்கு கூடியுள்ளோம். திமுகவில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் மாநாடுபோல நடத்தப்படும். 75 ஆண்டுகளைக் கடந்துள்ள திமுகவுக்கு இளைஞரணி மிகப் பெரிய பலமாகும்.
குஜராத்தில் அமித்ஷா பேசும் போது ‘பிஹாரில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்து தமிழ்நாடுதான்’ என்று பேசியுள்ளார். எவ்வளவு மிரட்டினாலும், அதை எதிர்கொள்ள திமுக இளைஞரணி தயாராக உள்ளது.
சிபிஐ, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் என அரசு அமைப்புகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது பாஜக. இப்படிப்பட்ட கட்சியை நம்பி தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார் பழனிசாமி.
சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் 2026-ல் பழனிச்சாமியை தமிழக முதல்வராக்குவோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதிமுக தற்போது இன்ஜின் இல்லாதகாராக உள்ளது.
பாஜாக என்ற லாரி, அந்தக் காரை கட்டி இழுத்து செல்ல முயற்சிக்கிறது. எனவே, பழனிசாமி முதலில் பாஜகவிடம் இருந்து அதிமுகவை காப்பற்ற வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அடுத்த 4 மாதங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வானவில் அழகாக இருக்கும். அதைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால், வானவில் நிரந்தரம் கிடையாது.
உதயசூரியன் தான் நிரந்தரம். அதுதான் மக்களுக்கு வெளிச்சம் தரும். வரும் தேர்தலில் திமுகவின் வெற்றி சாதாரணமாக இருக்கக் கூடாது.
தமிழகத்தில் உள்ள 70 ஆயிரம் பூத்களிலும் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.