‘ஆச்சரிய’ அம்பாசமுத்திரம் தொகுதியில் அசத்தப் போவது யார்?

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. துரை

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. துரை

Updated on
2 min read

திருநெல்வேலி: தமிழகத்திலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையில், அதாவது 5 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதியாக அம்பாசமுத்திரம் உள்ளது. அதில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களிடையேதான் கடும்போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகளின் வேட்பாளர்களில் யார் அம்பாசமுத்திரத்தில் அசத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இத்தொகுதியில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய 2 நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம் ஆகிய 7 பேரூராட்சிகள், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கியுள்ளன.

இத்தொகுதியில் 1984, 1991, 2001, 2011, 2016, 2021 தேர்தல்களில் அதிமுகவும், 1957, 1962, 1967, 1971, 1989 தேர்தல்களில் காங்கிரஸும், 1977, 1980 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 1996, 2006 தேர்தல்களில் திமுகவும் வெற்றிபெற்றுள்ளன.

அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வி.பி.துரையும், அதிமுக வேட்பாளராக இசக்கி சுப்பையாவும், தவெக சார்பில் ராஜகோபாலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவசங்கரனும் முக்கிய வேட்பாளர்கள். இவர்களில் வி.பி. துரைக்கும், இசக்கி சுப்பையாவுக்கும் இடையே கடும் போட்டியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகள்

இத்தொகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அம்பாசமுத்திரத்தில் 1937-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அம்பை 16 உள்ளிட்ட 20 புதுவகை நெல் ரகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் வளர்ச்சிக்கும், திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதும், புதிய ஆராய்ச்சிகள் சொல்லிக்கொள்ளும்படி நடைபெறவில்லை என்பதும் பெரும் குறையாகவே இருக்கிறது.

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தவெக வேட்பாளர் ராஜகோபால், நாதக வேட்பாளர் சிவசங்கரன்

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தவெக வேட்பாளர் ராஜகோபால், நாதக வேட்பாளர் சிவசங்கரன்

விவசாயத்துக்கு அடுத்தபடியாக பத்தமடையில் பாய் உற்பத்தி, கூனியூரில் மண்பாண்ட உற்பத்தி, கல்லிடைக்குறிச்சியில் நெசவுத்தொழில், வாகைகுளத்தில் பித்தளை வார்ப்பு தொழில் போன்றவை பலருக்கு வாழ்வாதாரமாக உள்ளன.

இத்தொகுதியில் முக்குலத்தோர், நாடார், யாதவர், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் பெருமளவில் உள்ளனர். அத்துடன் இல்லத்துப்பிள்ளைமார், சேனையர், சைவப்பிள்ளை, செங்குந்த முதலியார் உள்ளிட்ட சமூகத்தினரும் பரவலாக உள்ளனர். மேலும் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

இருமுனைப் போட்டி

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாடார் சமுதாயத்தை சேர்ந்த வி.பி.துரை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் எம்எல்ஏ வேல்துரையின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உள்ளது. நாடார் சமுதாயத்தின் வாக்குகளையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும் என்பது காங்கிரஸாரின் கணக்கு.

அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய எம்எல்ஏ இசக்கிசுப்பையா இத்தொகுதியில் இருமுறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இவர் தேர்தல் அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே களப்பணியை தொடங்கிவிட்டார். தேர்தல் பணிக்கென்று தனித்தனி குழுக்களை அமைத்து சுறுசுறுப்புடன் வாக்கு சேகரித்து வருகிறார்.

“இத்தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாலும் தன்னிடம் தோற்றுப்போவார்” என்று, கட்சி பொதுக்கூட்ட மேடையிலேயே இசக்கி சுப்பையா கடந்த சில மாதங்களுக்கு முன் சவால் விட்டிருந்தார். கோயில் கொடை விழா, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என்று பலவற்றுக்கும் நிதியை வாரியிறைத்துள்ளார். இதனால், வெற்றிவாய்ப்பு எளிதாகும் என்று அதிமுகவினர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், 2 முறை எம்எல்ஏவாக இருந்தும் தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த வளர்ச்சி திட்டத்தையும் இவர் செயல்படுத்தவில்லை என்ற அதிருப்தி வாக்காளர்களிடையே இருக்கிறது. அம்பாசமுத்திரம் தங்களுக்கு பெருத்த சவாலாக இருக்கும் என்று கருதியே காங்கிரஸிடம் தொகுதியை திமுக தலைமை தள்ளிவிட்டுள்ளதாக விமர்சனங்கள் உள்ளன.

மேலும், தொடக்கத்தில் தேர்தல் பணியில் காங்கிரஸாருடன் திமுகவினர் ஒருசேர களப்பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தன. ஆனால், தற்போது அந்நிலைமை மாறி திமுகவினரும் முன்னின்று தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரங்களோ, வாக்கு சேகரிப்போ பெரிதாக பேசும்படியாக இல்லை. இதனால், இத்தொகுதியில் இருமுனை போட்டியே நிலவுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. துரை

தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in