

ரெஜினா: கனடாவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 2 விமானிகள் உயிரிழந்தனர்.
கனடாவைச் சேர்ந்த ஹார்வ்ஸ் ஏர் என்ற நிறுவனம் வின்னிபெக் நகரில் இரு விமான பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார், புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகியோர் பயிற்சி பெற்று விமானிக்கான உரிமத்தைப் பெற்றனர்.
சரக்கு விமானங்களில் விமானியாக பணியில் சேர குறைந்தபட்சம் 200 மணி நேரம் விமானத்தை இயக்கியிருக்க வேண்டும். அதற்காக இருவரும் ஹார்வ்ஸ் ஏர் நிறுவனத்தின் செஸ்னா 172 ரக பயிற்சி விமானத்தை வாடகைக்கு எடுத்து இயக்கி வந்தனர். இதன்படி கடந்த 18-ம் தேதி மனோஜும் ஸ்ரீசரணும் கனடாவின் ரெஜினா விமான நிலையத்தில் இருந்து ஸ்டீன்பாக் நகருக்கு பயிற்சி விமானத்தில் புறப்பட்டனர்.
ரெஜினா நகர் அருகே மூஸ் மவுன்ட்டன் பூங்கா வனப் பகுதியில் பயிற்சி விமானம் பறந்தபோது எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் இரு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு கனடா போலீஸார் விபத்து நேரிட்ட இடத்தைக் கண்டுபிடித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உடல்கருகிய நிலையில் இரு விமானிகளின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய துணை தூதரகம் இரங்கல்: இதுதொடர்பாக கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “கனடா பயிற்சி விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார், புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தூதரகம் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இருவரின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளது.