

மஞ்சக்கொம்பை பகுதியில் உயிரிழந்து கிடந்த சிறுத்தை.
மஞ்சூர்: ஊட்டி அருகேயுள்ள குந்தா வனச் சரகத்தில் 2 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. செந்நாய்கள் தாக்கியதில் இறந்ததா அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்று வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட விலங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவை பல நேரங்களில் இரை தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்குள் வருவதால், மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில், குந்தா வனச் சரகத்துக்கு உட்பட்ட மஞ்சக்கொம்பை பகுதியில் தனியார் இடத்தில் நேற்று முன்தினம் 2 வயதுள்ள பெண் சிறுத்தை தண்ணீரிலும், 6 வயதுள்ள ஆண் சிறுத்தை நிலத்திலும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.
இவற்றைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் கவுதம், குந்தா வனச் சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத் துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் அங்கு சென்றுஆய்வு செய்தனர். இறந்துகிடந்த சிறுத்தைகளுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்டன.
இதுகுறித்து வனச்சரகர் செல்வகுமார் கூறும் போது, “கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இதேபகுதியில் செந்நாய்கள் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது. கடந்த மாதம் காட்டு மாட்டை செந்நாய்கள் வேட்டையாடிய வீடியோ வெளியானது. சிறுத்தைகள் இறந்து கிடந்த இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செந்நாய்கள் நடமாடியதை பொதுமக்கள் பார்த்துஉள்ளனர்.
2 சிறுத்தைகளின் பின்புறத்திலும் செந்நாய்கள் கடித்தது போன்ற தடயம் உள்ளது. அருகில் செந்நாய்களின் எச்சம் உள்ளது. செந்நாய்கள் கடித்து உயிரிழந்ததா அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்று பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் தெரியவரும்" என்றார்.