

நயினார் நாகேந்திரன் |கோப்புப் படம்
நாகர்கோவில்: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாது என்று, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: திமுக கூட்டணி சார்பில் கருத்து திணிப்பு நடந்துள்ளது. திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்துள்ளதாக அறிகிறேன்.
அரசு ஊழியர்கள், அதிகாரிகள், வியாபாரிகள், பெண்கள் மிகப் பெரிய மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனர். நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். என்னை பொறுத்தவரை விஜய் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
உலக நாடுகளில் இன்று எவ்வளவு மோசமான சூழ்நிலை உள்ளது என்று தெரியும். பல நாடுகளில் சமையல் காஸ் கிடைப்பதில்லை. அமெரிக்கா - ஈரான் போரால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா உலக நாடுகளோடு நட்பு நாடாக உள்ளது. அதேபோல் பிரதமர் உலக தலைவர்களோடு நட்பு பாராட்டி வருகிறார். இதனால், தட்டுப்பாடு இன்றி சமையல் காஸ் கிடைத்து வருகிறது. மத்திய அரசு மக்கள் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கும்.